பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 ஒன்றிப்பு என்பதுபோல், தலையை நிராயுதபாணியாக வைத்தபடியே, கையொடுங்கி காலொடுங்கி நடக்கிறேன். காகங்களின் புறத் தாக்குதலை விட, அகத் தாக்குதலே அதிகமாய் வலித்தது. நானும் மனிதனே. எந்த உயிரையும் இம்சிக்காத சராசரிக்கும் மேலான மனிதன். ஒருத்தர், வயிற்றை, பிறஉயிர்களுக்கு சுடுகாடாய் ஆக்கக் கூடாது என்ற உயிர்த்திரள் பேணும் தாவர சங்கம நேயத்தால் வள்ளலார் பக்கம் வந்தவன். அவர் விரித்த கடையின் சேவகன். உயிர் உணவான அசைவ உணவை விட்டவன். இப்படிப்பட்ட நானா இந்த காகங்களுக்கு வில்லன்? நான், வழிமாறி நடந்தாலும், அந்தப் பக்கமும் கடைகண்ணிகள். கண்ணாடி குவளைகளுக்குள் நீருற்றுப் போல் எழும் பல்வேறு பழரச பாய்ச்சல் கடை. கண்ணாடி மாடங்களில் கண்சிமிட்டும் மிட்டாய் கடை... தள்ளுவண்டியில் மினுங்கும் வித விமான பழங்கள். தெருவோர புத்தகக் கடை. கானாப் பாடல்களை ஒலிக்க வைக்கும் கேசட் கடை. திருமண மண்டபம் அதன் இருபக்கமும் பூக்கடைகள். மண் பிள்ளையாருக்கு ஜிகினா ஆபரணங்களை ஒட்டும் பெண்ணுக்கு மத்தியில் மண்டிக் கிடக்கும் பிள்ளையார் சிலைகள். இவற்றிற்கு ஊடாக நடக்கிறேன். ஒரு பலசரக்குக் கடையில், பொரிகடலைப் பொட்டலம் தென்படுகிறது. உடனே, என் மனதில் ஒரு பொறி. இந்த கடலைகளை வீசி, என் வீட்டுக் காகங்களை கவர வேண்டும். நான் அவற்றின் நண்பன் என்பதற்கு, இந்த உணவுப் பொட்டலம் சாட்சியாக வேண்டும். அந்தக் காகங்கள் என்னுடன் நட்பு பாராட்டுவதை பார்த்ததும் கைதட்டிச் சிரித்த அவள் மூக்கின் மேல் விரலை வைக்க வேண்டும். நான் புத்துயிர் பெற்றவனாய் நடக்கிறேன். சிறுமை பெருமையாகிறது. அசம்பாவிதப் பயம் பெருமித கம்பீரமாகிறது. கா. கா. காக்கா அண்ணாவே நீங்கள்’ என்று கலைஞரின் பராசக்திப் பாடலை முணு முணுத்தப்படியே, வீட்டுப்படிகளில் ஏறி முதல் மாடிக்கு