பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 பனிப்போர் என் அறையை விட்டுப் போகும் அவனை ராமபிரானைப் பார்ப்பது போல் பார்த்தேன். என்னுள்ளே ஒரு பூரிப்பு. ஆமாம். எனக்குள்ளும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. என் வாயிலிருந்து வருபவை எல்லாம் பலிக்கின்றன என்று பல நண்பர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எனக்கு தியானம் சிறிது பழக்கம். மூன்றாவது கிராஸ் தெருவில் மூலையில் ஒரு குடிசை, அங்கே ஒரு சாமியார். குடிசை சாமியர் என்பதால் கோபுரக்காரர்கள் பார்வைபடாதவர். ஒரு நாள் மனைவியைக் காணவில்லை என்று அவள் போகாத கோவிலுக்குள் நான் போனபோது, அந்த சாமியாரைப் பார்த்து சிரித்து ஒரு வணக்கம் போட்டேன். உடனே அவர், எனக்கு ஒரு தியான முறையைச் சொல்லிக் கொடுத்தார். ஒலியை உருவகப்படுத்தி, வாய், தொண்டை, இருதயம், ஈரல், தொப்புள், ஆசனவாய், முதுகுத்தண்டு, பின்தலை, நெந்றி, காதுகள், கண்கள், மூக்கு முனைகள் வழியாய் கொண்டு செலுத்தி உச்சந்தலைக்கு உட்புறம் ஜோதி மயமாய் நிறுத்தி தரிசனம் காண வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். அதற்குக் கை மாறாக பத்து ரூபாய் கொடுத்தபோது, 'நீ எனக்கு தருவது சந்தோஷம். நான் உனக்கு தருவது மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு சந்தோஷம் ஈடாகாது' என்று சொல்லிவிட்டு, அந்தப் பத்து ரூபாயை சந்தோஷமாகவோ, மகிழ்ச்சியாகவோ வாங்கிக் கொண்டார். இந்தத் தியான முறையை என் நண்பர் அருண் வீரப்பனிடம் சொன்ன போது, "காலையில் மூன்று மணிக்கும் நாலரை மணிக்கும் இடையேயுள்ளது பிரம்ம முகூர்த்தம், இதில், சரஸ்வதி தேவி மகா விஷ்ணுவுக்கு வீணை வாசிப்பதாக ஐதீகம். இந்தச் சமயத்தில் தியானியுங்கள். ஆனால், அதற்குப் பிறகு தூங்கக்கூடாது: அப்படித் தூங்கினால் உடம்பிலிருந்து வெளியேறு வதற்காகக் கிளம்பும் நோய் நொடிகள் உடம்புக்குள்ளேயே மறு இடங்களில் படிந்து கொள்ளும்" என்றார். ஆனாலும்,