பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 பனிப்போர் ஆனாலோ ஆசை கூடாது. புத்தர் மற்றவர்களுக்காக, தனது நிர்வாணத்தை தானே மறுத்ததுபோல்; நான் உங்களுக்காக என் ஆசையை விடாமல் வைத்திருக்கிறேன்." என் மனைவி அழுவதைப் பார்த்தேன். அவள் விம்மலைக் கேட்டேன். அவள் உள்ளறைக்குள் ஓடினாள். டெலிபோனில் எண்களைச் சுற்றினாள். 'சீக்கிரம் வாண்ணா. சீக்கிரம் வாண்ணா" என்று அழுது கொண்டே அரற்றினாள். பிறகு என்னிடம் மீண்டும் வந்து மகனையும், மகளையும் என் இரண்டு தோள்களிலும் சாத்திக்கொண்டு விம்மினாள். இதற்குள், என் டாக்டர்-மைத்துனன் ஒரு காரோடு வந்தான். நன்றாக நடக்கக்கூடிய என்னை, அவனும் அவளும் கைத்தாங்கலாய்ப் படியிறக்கி காருக்குள் திணிக்கிறார்கள். குழந்தைகள் அம்மாவைப் பார்த்தபடியே அழுகின்றன. அவளோ, அக்கம் பக்கம் பார்த்தபடியே கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். கால் மணி நேரத்தில் ஒரு மருத்துவமனையில் தனி அறைக்குள் திணிக்கப்படுகிறேன். ஸ்டெதாஸ்கோப் மாட்டாத ஒரு டாக்டர் என் மைத்துனரிடம் “டிரான்ஸ் குலைஸ்ர் கொடுத்தா சரியாயிடும். அதுல முடியாட்டா ஷாக் ட்ரீட்மெண்ட கொடுக்கலாம்! உங்க ஸிஸ்டருக்கு ஆறுதல் சொல்லுங்க. அவரை எப்படியும் குணப்படுத்திடலாம்" என்கிறார். என்னுள்ளும் ஒரு பயம். நேற்றிரவு முதல் என்னுள் ஏற்பட்டது அந்த கடைநிலை ஊழியன் சொன்னதுபோல் ஞானமா?. அல்லது அந்த அலுவலகப் பெண் சொன்னது போல் பித்துக்குளித்தனமா? ஒரு வேளை ஒருவனுக்கு பைத்தியம் பிடித்தால், அவன் சிந்தனை இப்படித்தான் இருக்குமோ? சிந்தாரிப்பேட்டை ஆறுமுகம், நான் கடவுள், நான் கடவுள்' என்று பைத்தியத்தில் புலம்பியது மாதிரி புலம்புகிறேனா? நான் பைத்தியமோ? அதனால் தான் மனைவி இப்படி அழுகிறாளோ? இல்லை. ஆமாம்.