பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 திடப்பட்டவள் என்று நிரூபிப்பவள் போல், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டாள். தம்பிகளும் சரி, தம்பி பிள்ளைகளும் சரி, அவளைக் கண் போல் நேசிக்கிறார்கள். என்றாலும், அவளுக்கு மனம் கேட்கவில்லை. அருளய்யாவின் பந்தத்தை அவளால் விட முடியவில்லை. கடிதம் எழுதினாள். மன்னிக்கும்படி மன்றாடி எழுதினாள். ஆனால் அருளய்யா பழைய அருளய்யாவல்ல. அவர் ஆன்மாவை இளையவள் ஆட்சி செய்கிற காலம். குடும்பம் கெட வேண்டும், குழந்தை நல்ல முறையில் வளர்க்கப்படலாகாது என்ற வஞ்ச உணர்வில் வேலையை விட்டுப் போனவள், உறவையும் விட்டுவிட வேண்டியதுதான் என்று நாலு வரியில் ஒரு கடிதத்தை எழுதிப் போட்டுவிட்டு, இளையவளிடம் சபாஷ் வாங்கிக் கொண்டார். ஆனால் எலிஸபெத்தின் மனத்தில் இன்னும் நம்பிக்கை இருந்தது. எலிஸபெத்தின் கண்கள் திருமணக் கூடத்தில் கணவனைத் தேடின. எப்படியோ, அருளய்யாவும், அவள் கண்ணில் சிக்கினார். தம்பி ஜோஸப் அவங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அவங்க பலமாய்த் தலையை பக்கவாட்டில் ஆட்டுறாங்க. ஏன் முகம் இப்படிக் கோபமா இருக்கு? எலிஸபெத் அப்போதே எழுந்து, அவர் அருகில் போய் உட்காரத் துடிப்பவள் போல் தவித்தாள். மணமகன் மணமகளின் வலது கையைப் பிடித்திருந்தான். ஆராதனை செய்யும் பாதிரியார் சொல்லச் சொல்ல, அவன் திருப்பிச் சொன்னான். எலிஸபெத், கணவன் இருந்த இடத்தைப் பார்க்கிறாள். அவரையும், அவள் தம்பியையும் காணவில்லை. இருவரும் ஆலயத்திற்கு வெளியே நின்றார்கள். அருளய்யா தற்செயலாக அவளைப் பார்த்துவிட்டு, முகத்தை வன்முறையாகத் திருப்பிக் கொண்டார். அவளாலும் பார்க்க முடியவில்லை. நீர்த் திவலைகள் பார்வையை மறைத்தன.