24
ரசவாதம்
"சாமி. ஊதா நிறம் போயிட்டது. போயிட்டுது. எல்லாம் போயிட்டுது."
"இதுக்குப் பேருதான் சுன்னம். மயில் துத்தத்துல ஊதாவைப் போக்கிவிட்டால் சுன்னம்.”
சம்பூர்ணம் சிரித்துக் கொண்டார். மறுநாள், மயில்சாமி, சந்தையிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருந்த ஊது உலையில் செம்புக் களிம்பு உருக்கப்பட்டது. அந்தக் களிம்பு குழைந்து நெளிந்து ஊதா நிறத்தில் தவழ்ந்தபோது, சம்பூரணம் அதன் மீது வெள்ளைப் பஸ்பமாக மாறிய மயில் துத்தத்தைப் போட்டுவிட்டு, அந்தக் கலவையைப் பானையில் இருந்த நீரில் போட்டார்.
இருவரும் ஊதா நிறத்தில் காட்சியளித்த அந்த செம்புக் களிம்பையே பார்த்தார்கள். ஊதா நிறம் மாறிக் கொண்டே இருந்தது. படிப்படியாக, கண் முன்னாலேயே கண்ணுக்குத் தெரியாமலேயே மாறிக் கொண்டிருந்தது. இப்போது மயில்சாமியுடன் சம்பூர்ணமும் துள்ளிக் குதித்தார்.
"செம்பு. தங்கமாய் மாறிட்டு. தங்கமாய் மாறிட்டு. நினைச்சதைச் சாதிச்சிட்டேன். சாதிச்சிட்டேன்."
“என் பெண்ணுக்கு மட்டும் இப்படி மூணு பவுன் கிடைச்சால், அவள் கல்யாணம் எப்பவோ முடிஞ்சிருக்கும்."
மயில்சாமி தன்னை யறியாமல் சொல்லிவிட்டு, தன்னையறிந்து உதட்டைக் கடித்தார். சம்பூரணம், அவரையே பார்த்தார். பாவம். பரம ஏழை. இவன் பெண்ணாவது நல்லா வாழணும்.
சம்பூரணம், நீரில் கிடந்த தங்கத்தை எடுத்து மயில்சாமியிடம் நீட்டினார். அவர் வாங்காமலேயே பதறினார். பிறகு, மகளுக்கு ஒரு சங்கிலி போட்டால், கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு விழும் என்ற எண்ணத்தில் வாங்கிக் கொண்டார், அங்கே நிற்கப் பயந்தவர் போல் வீட்டுக்கு ஓடினார். இந்தத் தங்கம் எப்படிச் கிடைச்சுது. மிராசுதாரர் அருணாசலம் வீட்ல நகை நட்டுத் திருடு போயிட்டுதாம். இந்தத் தங்கம் எப்படிக் கிடைச்சுது?