பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 27 எல்லாம் சொல்லிவிட்டு, திரும்பிப் பாராமலே ஒடினார். குருநாதரைப் பார்க்கப் பயம். ஆனாலும் திருக்குறளை நினைத்துக் கொண்டார். "புரை தீர்ந்த பொய்மையை சொன்னதில் தவறில்லை என்ற ஒரு நம்பிக்கை." அதே சமயம் ஒரு பெண்ணின் திருமணம் நின்று போய்விடுமோ என்கிற பச்சாதாபம். நடப்பது நடக்கிறபடி நடக்கட்டும் என்கிற விரக்தி, சம்பூர்ணம், ஒரு மலையடிவாரத்துக்கருகே போய் உட்கார்ந்தார். மலை உச்சியில் இருந்த முருகன் கோவிலுக்குள் நுழையும் தைரியம் இல்லாமல், மனதுக்குள் புலம்பினார். அப்போது பண்ணையார் அருணாசலம் வீட்டில் திருமணவிழா. மணமகள், உற்றார் உறவினர் புடைசூழ கோவிலுக்கு போகிறாள். அவள் உடம்பில் ஆடை இல்லாத அத்தனை இடங்களிலும் நகை நட்டுக்கள் ஜொலிக்கின்றன. 'இப்போதைக்குப் போதும் என்று நினைத்து, அருணாசலம் உருவாக்கிய இருபது பவுன் தங்கக்கட்டி மணமகளின் கரங்களில் தங்கக் காப்புகளாக, கழுத்தில் ரெட்டை வடச் சங்கிலியாக மின்னியது. கோவிலுக்குள் நுழையப் போகிற சமயம். மணப்பெண்ணை, கிண்டலும், கேலியுமாக மொய்த்த தோழிகள் திடீரென்று அவளை உற்றுப் பார்க்கிறார்கள். பிறகு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி, அவள் கையைத் தூக்கியும், கழுத்தை வளைத்தும் பார்க்கிறார்கள். அதிர்ச்சியோடு சூள் கொட்டுகிறார்கள். மணமகளின் பொன் நிற காப்புகளும், ரெட்டை வடச்சங்கிலியும் திடீரென்று ஊதா நிறத்தில் கண் சிமிட்டின. கல்கி - 14.10.1979