பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 39 "மறக்கக் கூடிய விஷயமா? ஆனால் பயமாய் இருக்கு." 'நான் ஜென்டில்மேன். உனக்கு வேண்டான்னா வேண்டாம்." "நினைச்சிட்டோம். போயிட்டு வந்திடுவோம். பாரிஸ் பஸ் ஸ்டாண்ட்தானே!" வசந்திக்கு திருமணமான அவனுடன் மகாபலிபுரம் போய், மேலும் அதிகச் சலுகைகளை அவன் எடுத்துக் கொள்ள அனுமதிப்பது சரியாகத் தெரியவில்லைதான். வருங்காலக் கணவனுக்குத் துரோகம் இழைக்கிறோமே என்ற எண்ணமும், இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறோமே என்ற தவிப்பும், அவள் இதயத்தை மாற்றி மாற்றித் தாக்கின. ஆனால் அவன் நட்பில்லாமல் இருக்க முடியாதுபோல் அவளுக்குத் தோன்றியது. மகாபலிபுரத்தில் அவன் அதிகப்படியான சலுகைகள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. அதேசமயம், தன் குடும்பக் கஷ்டங்களை எல்லாம் சொல்லி அவனிடம் அழ வேண்டும். அலுவலகம் முடிந்ததும், அவள் வள்ளலார் பாடிய கந்தசாமி கோவிலுக்குப் போனாள். பலதடவை கோவில்களுக்குப் போயிருந்தாலும், இப்போது தான் முதல் தடவையாக அவளுக்குப் பக்தி, ஒரு பெர்ஸனல் விஷயமாகத் தெரிந்தது. முருகன் அவள் அருகிலேயே இருப்பதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. அவன், எந்தத் தீங்கையும் அனுமதிக்க மாட்டான் என்று ஒரு நம்பிக்கை பிறந்தது. சுற்று முற்றிலும் மொய்த்த பக்தர்கள் கூட்டத்தில் தானும் ஒரு அங்கம் போலவும், தானே ஒரு மாபெரும் கூட்டம் போலவும் அவளுக்குத் தோன்றியது. பிரகாஷ், ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் பஸ் நிலையத்தில் அவளுக்காகக் காத்து நின்றான். ஆனால் வசந்தி வரவில்லை. வரவே இல்லை.