பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 43 தயங்கியது. சிறிது பின் வாங்கி, பின்னர் மெள்ள மெள்ள முன் வாங்கியது. சாலையின் நடுப்பகுதிக்கு வந்து, கொட்டும் பனியில் எந்தப்பக்கம் போகலாம் என்பதுபோல், அங்குமிங்குமாய்ப் பார்த்தது. நட்டநடு இரவில் கொட்டும் பனியில் அதுவும் அந்த பஸ் ஸ்டாப் பின் பக்கமாக வந்து, சிமெண்ட் பெஞ்சின் இன்னொரு முனையில் உட்கார்ந்து கொண்டது. அதட்டப் போன புதர் உருவம், அப்படித் செய்யத் தனக்கு அதிகாரமில்லை என்று நினைத்தபடி மெள்ள வினவியது. "யாரது?" பதிலில்லை. "அட... யாருன்னேன். அட ஒன்னத்தான். பதில் சொன்னா. குறைஞ்சா. பூடுவே. நீ யாரு...?" கேட்கப்பட்ட உருவம், கேட்ட உருவத்தை ஏறிட்டுப் பார்த்தது. சிறிது ஆறுதல் பட்டது. பின்னர் லேசான குரலில் கனத்த வார்த்தைகள் வைத்தது. "இதே கேள்வியைத் தான். நானும் இத்தனை நாளாய் நேக்கு நானே கேட்டுண்டு வந்தேன். அப்போ ஆத்துக்காரர். ஜடமுன்னார். மாமியார் அசடுன்னனார். அப்புறம், பிறந்தாத்துல... நாத்தனார் வாழா வெட்டின்னாள். அண்ணா சனியன்னான். அவனோட பசங்க கூனி அத்தேன்னான். இவாள். அத்தனை பேரும் நான் கேட்காமலே என்னையார்னு சொன்னாள். இவாள் சொன்னதுல, நான் எதுல சேத்தின்னு நேக்குப் புரியல்லே ஒரு வேளை அத்தனையிலும், சேத்தியாய் இருக்கலாம். நான் யாருன்னு நேக்கே தெரியல. அதனாலதான் பகவான்கிட்டே கேக்கலாமுன்னு நம்பி அந்த வீட்டை விட்டுப் புறப்பட்டுட்டேன்.” புதர் உருவம் சிறிது நேரம் பேச்சற்று, பேசிய உருவத்தைப் பார்த்தது. பிறகு, மெல்ல மெல்ல,