பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாசிப்புக்கு முன்னே...


இது, எனது பதினேழாவது சிறுகதை தொகுப்பு மட்டுமல்ல... மற்ற தொகுப்புக்களிலிருந்து முழுமையாக மாறுபட்ட தொகுப்பு. என்னுள் இளம் வயதிலிருந்தே எழுந்த ஒரு ஆன்மிகத் தேடலை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. இந்தத் தொகுப்பு எனது வழக்கமான வாசகத் தோழர்களுக்கு சிறிது அதிர்ச்சியைக் கொடுக்குமோ என்றுகூட அஞ்சுகிறேன். காரணம், இதிலுள்ள கதைகள் அத்தனையிலும் என்னுள் இன்னொரு பக்கமான ஆன்மீக அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், நான் அடித்தள மக்களைப் பற்றி இனிமேல் எழுதப்போவதில்லை என்று பொருள் அல்ல. இந்தத் தேடல் முயற்சி அடித்தள மக்களைப் பற்றிய என் எழுத்தை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.

பிள்ளைப் பிராயம்

சிறுவயதிலிருந்தே, உங்களுக்கும் எழுந்திருப்பதைப் போல் எனக்கும் குழந்தைத்தனமான ஒரு ஆன்மீகத் தேடல் ஏற்பட்டது. எனது அய்யா வழித் தாத்தாவும், அம்மா வழித் தாத்தாவும் காளியம்மா சரமியாடிகள். இவர்கள், இப்போதைய "நைட்டி" மாதிரியான அங்கியை கழுத்து முதல் பாதம் வரை அணிந்து கொண்டும், கையில் வளையல்களை போட்டுக் கொண்டும், சிலரைப் பயமுறுத்தியும், பலரை பரவசப்படுத்தியும், மேளதாளங்களுக்கு ஏற்ப அல்லது வில்லுப்பாட்டாளியின் இசைக்கு ஏற்ப, தீப்பந்தங்களை பிடித்துக் கொண்டு ஆடுவதை பார்த்திருக்கிறேன். என் கரங்களில், இவர்களுக்கு காணிக்கையாக வந்த மிட்டாய்களையும், மொறுக்கு களையும், பயித்தம் பருப்பையும், காளிமார்க் சோடாவையும் என் கையில் திணித்ததும், மிட்டாய் வகையறாக்களை தின்றுவிட்டு அவர்கள் கொடுத்த பாதி சோடாவை குடித்ததும் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது. ஆனாலும், இவர்கள் இருவரும் தலை வெட்டப்பட்ட “கிடாய்"யின் ரத்தத்தை தூக்கிக் குடித்தது என்னுள் ஒரு பயங்கரமான நினைவாகப் பதிந்துள்ளது. கோவில் கொடைகளுக்குப் பிறகு, நானும், இதரச் சிறுவர்களும், வாதமடக்கிக் கம்பை வளைத்து வில்லாக்கி, வில்லுப்பாட்டு