உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பக்த கேடிகள்

கிராமத்து முண்டாக இளைஞர் போல் தோன்றிய-ஒளி வடிவமான ஐயப்பன், தான் அமர்ந்திருந்த புலியை அர்த்தத்துடன் பார்த்தான். அது சிலிர்த்தபோது கோபத்தோடு, முறைத்தான். அவ்வளவுதான் புலிபாய்ச்சல் என்பார்களே- அதை ஐயப்பனுக்கு உணர்த்த ஆசை பட்டதுபோல், அந்த தெய்வப்புலி, தனது ஐயனைச் சுமந்தபடி, சபரிமலையைத் தாண்டிக் குதித்து, காடுமலை தாண்டி, பள்ளத்தாக்குகளுக்கு மேலாப் பாய்ந்து, சமவெளிக்கு மேலாய் சஞ்சரித்து ஏவுகணை போல எகிறிக் கொண்டிருந்தது.

இ ந் த ஐ ய ப் ப ன் , எ ந் த ச் ச ம ய த் தி ல் புறப்பட்டாரோ-அந்தச் சமயத்தில், வள்ளிமலையில் குளிர் காய்ந்த முருகன், ஆறுமுகங்களை ஒருமுகமாக்கி மலை உச்சிக்கு ஓடினான். அந்த ஒட்டத்தைப் புரிந்து கொண்ட மயில், இறக்கைகளை ஒய்யாரமாக விரித்து ஹெலிகாப்டர் மாதிரி பாறையில் இறங்கி, அவனை ஒயிலாகப் பார்த்தது. உடனே பாம்பு, மயிலின் பாதத்திற்குள் நுழைந்தது. அச்சப்படக்குரல் எழுப்பும் தெய்வச் சேவல் கால்கள் கொடியாக, அதன் எஞ்சிய மேனி சின்னமாக, முருகன் பக்கம் ஒட்டிக் கொண்டது. வேல் விளங்க வினை தீர்த்தான், மயில்மேல் ஆசனம் கொள்ளப் போனபோது, வள்ளி, வழிமறிப்பதுபோல் குறுக்காய் நின்றாள். 'மூத்தாளை மனதுக்குள் திட்டியபடியே, சுடச் சுட கேட்டாள்.