பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



V

 பாடியிருக்கிறோம். வில்லுப்பாட்டாளி வெற்றிக்குமார் அவர்கள் ராமபிரான் கதையையும், முத்துப்பட்டன் கதையையும் பாடும்போது சிலிர்த்து போயிருக்கிறேன். எங்கள் ஊருக்கு அருகேயுள்ள மலையனூரில் பாவைக் கூத்து நாடகம், மாதக் கணக்கில் நடந்ததை நான் தவறாது பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் இவை ராமாயணக் காட்சிகள். இன்னும் மனதில் பதிந்து நிற்பவை. வழியனுப்பு இந்த அனுபவங்களுக்குப் பிறகு, ஊர்க் கச்சேரியிலும், பெரிய விட்டுத் திண்ணைகளிலும், நல்லதங்காள் கதை, பஞ்சபாண்டவர் வனவாசம் போன்றவற்றை, ராகம் போட்டு பாடியிருக்கிறேன். என்னைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே இருக்கும். எல்லா கிராமங்களையும் போல, எங்கள் கிராமத்திலும் ஒரு பழக்கம். சில பெரியவர்கள் மரணப் படுக்கையில் கிடக்கும்போது அவர்களுக்கு உயிர் உடனடியாய் பிரியாது. அவரது சொக்காரர்கள் எனப்படும் பங்காளிகளுக்கோ, இவரது ஈமக்காரியத்தில் கலந்து கொள்ளாமல் வயல் வேலைக்குப் போக முடியாது. இந்த அன்றாடம் காய்ச்சிகளின் பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவர, நோய்வாய்ப் பட்டிருக்கும் பெரியவரின் தலைமாட்டிலிருந்து, தர்மர் சொர்க்கத்திற்கு போன கதையை ராகம் போட்டு படிக்கவேண்டும். தயவுசெய்து நம்புங்கள். தர்மர் சொர்க்கத்திற்கு போய்விட்டார் என்ற உடனேயே இந்தப் பெரியவர்களின் மூச்சு அடங்கிப்போகும். நானும், பல பெரியவர்கள் தலைமாட்டில் உட்கார்ந்து இத்தகைய சொர்க்கப் பாடல்களை பாடி, பலரை வழியனுப்பி வைத்திருக்கிறேன். இந்த கோவில்களையும், பாடல்களையும் தாண்டி, எள்ளுப்பொடி, தோசையுடன் என் பாட்டியோடு குற்றாலம் போயிருக்கிறேன். அங்கே உள்ள குற்றால நாதரான சுயம்பு லிங்கத்தை ஒப்புக்கு கையெடுத்து கும்பிட்டதோடு சரி. அப்போது எனக்கு, என் குலதெய்வமான உதிரமாடனே இந்த கயம்பு லிங்கத்தை விடப் பெரியவன். கல்லூரிக் காலத்தில்... கல்லூரிப் படிப்பு கிராமத்துத் தேவதைகளையும், ஆறுகால பூஜைக்குரிய மேட்டுக்குடி தெய்வங்களையும் மறக்க வைத்தது.