பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 பக்த கேடிகள் முருகனோ, மீண்டும் ஒரு முறுவலிப்பை முகத்திற்கு கொடுத்தபடியே, அவளைப் பார்த்தான். பிறகு முகம் சுழித்தான். உடம்பை, ஒரு குலுக்கல் குலுக்கியபடியே உன் பேச்சைக் கேட்க. எனக்கு நேரமில்லை. இதோ ஐயப்பன் காட்பாடியைக் தாண்டிவிட்டான் என்று கத்தினான். வேல் முனையால் பாறையில் கோபமாய் குத்தினான். அதைப் புரிந்து கொண்ட புத்திசாலி மயில், வானுள் பாய்ந்தது. சேவல் கொக்கரித்தது. பாம்பு படமெடுத்தது. வள்ளி எந்த மூத்தாளை எதிரியாகப் பாவித்தாளோ, அந்த மூத்தாளிடம் ஆலோசனை கேட்பதற்காக திருப்பரங்குன்றம் பறந்தாள். சிறிது நேரத்தில், ஐயப்பனும், முருகனும், சென்னை நகரில் கடற்கரையோர காமராசர் சாலையில் கடல் நோக்கி நின்ற அந்த கட்டிடத்தைச் சுற்றி வலம் வந்தார்கள். இருவர் முகங்களிலும் ஏளனப் புன்னகை. இருவர் கண்களிலும் அக்கினித்தாண்டவம், ஒருவரை ஒருவர் ஆழப் பார்த்தபடியே, இருவரும், தத்தம் வாகனசகிதமாய், அந்தக் கட்டிடத்தின் மேல்பரப்பில் தரையிறங்கினார்கள். ஒருவரை ஒருவர் நோக்கி, ஒப்புக்குச் சிரித்தபோது, இருவரின் வாகனங்களும், அமைச்சர்கள் அல்லது அதிகாரியின் பி ஏக்கள் சாமானியர்களைப் பார்ப்பார்களே அந்த கர்வப் பார்வையை பறிமாறிக் கொண்டன. ஐயப்பனின் புலி முருகனின் மயிலைப் பார்ப்பதை விட்டுவிட்டு, யதேச்சையாய் கண்களை விலக்கியபோது, அவற்றுள் சேவல் தென்பட்டது. சைவ' ஐயப்பனிடம் மாட்டிக் கொண்ட அந்தப் புலி, இப்போது சேவலை ருசியோடு பார்த்தது. அந்த அசைவப் பார்வையை அறிந்துகொண்ட மயில், காடுகளில், துஷ்ட மிருகங்களைக் கண்டால், மரமேறி நின்று, மான்களுக்கு அபாயக் குரல் கொடுத்து எச்சரிக்கும் தனது பறவை சாதிக்கு ஏற்றாற்போல், கூக் குரலிட்டது. உடனே சேவல், ஒரே துள்ளாய்த் துள்ளி வேலின் மேல் ஏறி நின்றது. எதிர்பாராத சேவல் செயலால் வேல் முன்னும் பின்னும் ஆடியது.