பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சு. சமுத்திரம் 61 முன்னால், சப்பனம் போட்டபடியே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முன் முழக்கமிட, இவரது கோஷ்டியைச் சேர்ந்த பெருமாளின் சபார்டினேட்டுகள், பின் முழக்கமிட்டார்கள். இரண்டு அறைகளிலும் பக்திக் குரல்கள், காதுகளைப் பாதிக்கும் குரல்களாக மாறின. பெருமாளைப் போல் பெரிய குரல் வாய்ந்த பழனிச்சாமி மணியடித்தார். இவரும் நாற்பத்தைந்து வயதாகிய கறுப்புக் கம்பீரம். ஐயப்பன் ஒசை பெரிதாவதைக் காணச் சகிக்காத பழனிச்சாமி, மணியடித்த கை வலித்ததால் அலுவலக ஊழியர் சுப்பிரமணியத்திடம் அதை நீட்டினார். அவரும் 'மனி கிடைத்ததுபோல் மணியடித்தார். உடனே ஐயப்பன் அறைக்குள் உறுமிமேளம். பழனிச்சாமி, சக்தி முழுவதைம் வாயுள் திரட்டி நான் நம்புவது...' என்று சொல்லி மேற்கொண்டு முடிக்கும் முன்பே, அவன் ஆதரவாளர்கள் 'அரோகரா என்றார்கள். இதை அப சகுனமாக கருதி, பழனிச்சாமி ஐயப்பனைத் திட்டப் போனார். பெருமாள், முருகனைத் திட்டப் போனார். இருவரும் வெளியே வந்து, ஒருவரை ஒருவர் முறைத்தபடியே, ஆளில்லாத அந்த பெரிய அறையை பொதுப்படையாகவும் சும்மாக் கிடந்த சுழல் நாற்காலியை குறிப்பாகவும் பார்த்தார்கள். இதே சமயத்தில்கட்டிடத்தின் மேல்பரப்பில் ஒட்டைகள் வழியாய் ஒட்டுக் கேட்ட முருகனும், ஐயப்பனும், தத்தம் பக்தர்களைப் பெருமை பிடிபடாமல் பார்த்தார்கள். முருகன், பக்தன் பழனிச்சாமி கேட்டதை கொடுப்பதற்காக, வலதுகரத்தைத் தூக்கினால், உடனே, ஐயப்பன் தன் பக்தன் பெருமாளின் பெரிய எண்ணம் நிறைவேறுவதற்காக, தனது வலதுக் கையையும் தூக்கினான். உடனே, முருகன், இடக்கரத்தை தூக்கி, ஐயப்பன் வலக்கரம் வழங்கிய வரத்தைப் பறித்தான். ஐயப்பனும். அப்படியே செய்தான். பேலன்ஸ் ஆப் பவர். வெற்றி தோல்வி இல்லாத கெடுபிடிப்போர். இறுதியில் முருகன் முறுவலித்துச் சொன்னான்.