பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 83 பார்த்தார். நாமார்க்கும் குடியல்லோம். ஆமாம். அஞ்சி ஒடுங்கி வாயில்லாப்பூச்சியாய் இருப்பது அப்பர் பிரானை அவமதிப்பதற்கு ஒப்பாகும். சட்டம் என்ற கல்லைக் கட்டி, நீதிமன்றம் என்ற கடலில் போட்டாலும், நாமார்க்கும் குடியல்லோம். இசக்கியா பிள்ளை கற்பூரத்தை ஏற்றினார். ஆறுமுகமாய்ச் சுடர்விட்ட ஜோதியை அங்குமிங்குமாய் ஆட்டினார். பிறகு, அதை அப்படியே ஒளிரவிட்டு வெளியே வந்தார். ஒயர் கொடியில் தொங்கிய தேய்க்காத சட்டையைப் போட்டுக்கொண்டே மகளிடம் வந்து, படுத்துக் கிடந்தவளைத் துக்கி நிறுத்தினார். "எழுந்திரும்மா போகலாம்! ஆரம்பம் போலீஸ் ஸ்டேஷன். அப்புறம் எதுவரைக்கும் வேணுமுன்னாலும் போகட்டும். ஒன்னை மகளாய் நினைச்சுக் கூப்பிடலே. அம்பாளாய் நினைச்சுக் கூப்பிடுறேன். எழுந்திரு நாமார்க்கும் குடியல்லோம் எழுந்திரும்மா. ஆமாம் இப்படித்தான் எழுந்து நிற்கணும்." - கல்கி - 1991