பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைஞன்

‘இமைப் பொழுதே நிற்கும் இன்பம்’ - என்பதற்கு ஒரு சிலை செய்யும் ஆசை ஒருநாள் மாலை அந்தக் கலைஞன் உள்ளத்தில் எழுந்தது. அவனுக்கு வெண்கலத்தாலேயே சிலை அமைக்கத் தெரியும். அதனால் தான்விரும்பிய சிலை வார்க்க வேண்டிய வெண்கலத்தைத் தேடி உலகெங்கும் அலைந்தான்.

ஆனால், உலக முழுவதிலுமுள்ள வெண்கலம் எல்லாம் எங்கோ மறைந்து போய்விட்டது. ‘என்றும் அழியாத துக்கம்’ என்று ஒரு சிலை. அந்தச் சிலையின் வெண்கலம் தவிர உலகில் வேறு வெண்கலம் கிடையாது.

அந்தச் சிலையோ அவனுடையதே. அவன் வாழ்வில் எந்த ஒன்றைக் காதலித்தானோ அதன் கல்லறையின்மேல் அவனே அதைச் செய்து வைத்திருந்தான். அது இறவாத காதலின் அறிகுறி - அழியாக துக்கத்தின் அடையாளம். உலகத்திலோ, இந்த வெண்கலம் தவிர வேறு வெண்கலம் இல்லை.

அந்த விக்கிரகத்தை எடுத்தான், உலையில் இட்டான், ‘அழியாத துக்க’த்தின் வெண்கலத்தைக் கொண்டு ‘இமைப்பொழுதே நிற்கும் இன்ப’த்தின் உருவத்தை அமைத்தான்.

{{Right|ஆஸ்கர் ஒயில்ட்}}


______________