பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

v


மாசடைந்த மேனியோடும், மயங்கிய கண்களோடும் ஒய்வின்றி ஒழிவின்றி, ஊசியும் கையுமாய்த் தையல் வேலை செய்யும் பெண்ணின் அலங்கோலத்தைக் காண்மின்.

"கொஞ்சமேனும் அழுதால்
நெஞ்சம் ஆறும் ;
ஆனால் கண்ணிர்த்துளி
ஊசியின் ஒட்டத்தைத் தடைசெய்யுமே?”

என்று அவள் குமுறும் குரலைக் கேண்மின்.

இதற்கு மேலாக, அல்லற்பட்டு உழலும் குழங்தையின் அழுகுரல் கேட்கின்றது. ஆலைகளில் சக்கரங்களைத் சுற்றியும் கனிகளில் நிலக்கரி சுமந்தும் கைசோர்ந்து, மெய் சோர்ந்து கண்ணீர் வடிக்கும் குழங்தைகள் ‘எங்கள் அழுகுரல் இறைவன் செவியில் சேருமா' என்று ஆவி சோர்ந்து இவ்வுலகில் ‘எந்நாளும் துன்பமே, இன்பமில்லை’ என்றுணர்ந்து கல்லறையில் கனப்பொழுதும் கவலையில்லை என்று இறப்பின் மேன்மையைப்_பேசும்பொழுது நம் மனத்தில் எழுகின்ற துக்கத்திற்கு எல்லையும் உண்டோ? அந்தோ! குழந்தையின் சாபம் கொடிது: கொடிது.

இத்தகைய உணர்ச்சி நிறைந்த உயரிய கவிதைகள் நாட்டிலே பரவினால் மக்கட் சமுதாயத்தில் அல்லவை தேயும், அறம் பெருகும் என்பதில் ஐயமில்லை. அதுவே இந்நூலாசிரியரின் ஆசை. ஆங்கிலக் கவிதை மலர்களின் நறுமணம் தமிழ்நாடெங்கும் பரந்து கமழ்ந்து பெரு நலம் தருக.

9–10–51.

ரா. பி. சேதுப்பிள்ளை