பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என் தாய்நாடு

I


என் தாய் நாடே ! உன் அன்பின் பொருட்டுத்
தவிட்டை உண்பேன்,
கந்தையை அணிவேன்,
இசை, இன்பம் எல்லாம் எறிந்து விடுவேன் !

II


என்றேனும் ஒருநாள் என் ஆன்மா
இந்த அழியும் இல்லத்தை விட்டு
ஏக வேண்டியதே.
ஆனால் உன்னை விட்டு என்னைப் பிரிக்க
எமனுக்கும் ஆற்றல் உண்டோ ?
இல்லை என்று நீ அறிவாய்.

III


உன்னிடம் பிறப்பது -
எவ்வளவு அரிய பாக்கியம் !
அதை யார் என்னிடமிருந்து
பறித்துவிட இயலும் ?
அவ்வளவு துணிவுள்ள திருடன் உளனோ ?
காலத்தால் இயலுமா, மரணத்தால் இயலுமா?
ஒன்றாலும் இயலாது.

IV


என் தாய்நாடே ! உன்பொருட்டு
என் உடலை ஈவேன் !
என் உயிரை அளிப்பேன் !
மெய்மறந்து நிற்கும் என் அன்பு கண்டு
சிலர் நகைப்பர், சிலர் வருந்துவர்.

49

IV