பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

கழக வெளியீடுகள் பல, பல பதிப்புகள் வெளி வந்துள்ளன. அவற்றில் முனைவர் மு.வ. அவர்களின் திருக்குறள் தெளிவுரை குறிப்பிடத் தக்கது. அதே போல் ஆங்கிலத்தின் பன்மொழிப் புலவர் அறிஞர் கா. அப்பாத்துரையார் தொகுத்த கழக ஆங்கிலத் தமிழ்க் கையகராதியும் பல பதிப்புகள் வெளிவருதற்குரிய சிறப்பு பெற்றது.

அகராதி என்பது காலத்திற்கேற்ப வளர்ந்து வரும் கலை. அவ்வளர்ச்சிக்கேற்ப அவ்வப்பொழுது அதில் மாற்றங்கள் செய்து வெளியிடுவது இன்றியமை யாததாகின்றது. இதற்கேற்ப இவ்வகராதி அகராதித் துறையில் நன்கு பயிற்சி பெற்றுள்ள பேராசிரியர் அ.கி. மூர்த்தி அவர்களால் நன்கு செப்பம் செய்யப் பெற்று, இப்பொழுது முழுதும் திருந்திய பதிப்பாகக் கழக ஆங்கிலத் தமிழ் அகராதி என்னும் பெயரில் புதுப் பொலிவுடன் வெளிவருகிறது. இதில் நடைமுறையிலுள்ள அனைத்து ஆங்கிலச் சொற்களும் சேர்க்கப் பட்டுள்ளன; இனிய, எளிய, தூய தமிழில் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சொற்கள் ஒப்பு நோக்கியும் விளக்கப்பட்டுள்ளன. (ஒரு பொருள் பல சொல், எதிர்ச் சொல்) ஆகவே இவ்வகராதி வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும். அவர்கள் இதனைப் பயன்படுத்தித் தங்கள் சொல்வளத்தைப் பெருக்கிக் கொள்வார்களாக.