உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீபம்

147


இன்னாசி என்ன கேட்கப் போகிறான்? ‘அல்லி நீ இந்த அருச்சுனனுக்கு தப்பிப் போயிற முடியும்னு எவ்வளவு தப்பாக நினைச்சுட்டே?’—இப்படித்தானே ஆரம்பிக்கப் போகிறான்? மறுபடியும், அந்த இடிச் சிரிப்பா? அப்போதாவது சாத்தையன் ஓடி வந்து சேர்ந்தான். அவர்களை மோதிக் கவிழ்த்துக் கொள்ள விட்டு, தான் தப்ப முடிந்தது. இன்னாசி வயிற்றில் குத்துடன் கீழே விழுந்ததும், விலாக் குத்துடன் சாத்தையன் விழுந்ததும், தான் ஓடினதும் நினைவில் சுழல, இப்போதோ சாத்தையன் கீழே கிடக்கிறான். இன்னாசிக்கு இடம் ஒழிச்சு விட்ட மாதிரி. இன்னொரு உடல் நடுக்கம் அவளைக் குலுக்கியது. என்னதான் ஒவ்வொன்றையும் சமாளிக்கப் பார்த்தாலும், ஒன்று மேலே ஒன்றாக வருகிற போது…

இப்படி நினைப்பு ஓடிக் கொண்டிருக்கிற போது, இன்னாசி ஏதோ தன்னைப் பார்த்துச் சொல்ல வருகிற மாதிரி, அவன் உதடுகள் விரிய ஆரம்பிப்பதை, சூட்சுமமாகக் கவனித்தாள் அல்லி.

‘அல்லி!’—கூப்பிட்டு நிறுத்தி விட்டான் இன்னாசி. அதைக் கேட்டதுமே, அல்லி அதென்னவோ அந்தப் பழைய அல்லி ராணியாகவே சீறினாள். ‘சீ.மிருகம்! நீ பிழைச்சா வந்திட்டே? வயிற்றிலே குத்துப்பட்டும், தப்பிச்சிட்டியா?’ என்று கீழே கிடந்த சாத்தையனைப் பார்த்தாள்.

இன்னாசி பளிச்சென கையால், தன் வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். ஆழமாக இருந்த வடுவில், தன் விரலைக் கொடுத்து, ஒரு தரம் துளாவிக் கொடுத்துக் கொண்டான். சொக்கப்பனை இரவுச் சம்பவம் அவன் ஞாபகத்துக்கு வந்தது. கீழே கிடந்த சாத்தையனைப் பார்த்தான். ஒரு வேளை, எழுந்து அவன் தன் வயிற்றில் மீண்டும்!… பீதியில் அவன் கண்கள், மீண்டும் ஒரு தரம் கீழே கிடந்த இரும்புக் கம்பியைப் பார்த்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/148&oldid=1688584" இலிருந்து மீள்விக்கப்பட்டது