பக்கம்:ஆடும் தீபம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

ஆடும்


ஆனால், அவன் அதைப் பார்க்கத்திரும்பியபோது அவன் கண்டது இதுதான். தனக்குப் பக்கவாட்டில் சற்றுமுன் தள்ளிக் கிடந்த இரும்புக் கம்பியின் மறுமுனையை எதிர்ப் பக்கத்திலிருந்து முன் பாய்ந்து குனிந்து அல்லி கையில் எடுத்துக்கொண்டிருந்தாள்.

“இதோ பாரு, அல்லி! இன்னாசி கையைச் சற்று முன் வீசி லேசாக அசைவு கொடுத்து குனியப்போனவன். அந்த அளவிலேயே நின்றுவிட்டான். தான் ஒரே பாய்ச்சலில் அவள் கையை மணிக்கட்டோடு சேர்த்து பிடித்திருக்க முடியும். செய்யவில்லை. குனிந்தவன் நிமிர்ந்து விட்டான். அதே சமயம் கம்பியை வலது கையில் பிடித்து ஓங்கிக்கொண்டு பின்னால் பாய்ந்து நின்றாள் அல்லி.

“இதோ பாரு இன்னாசி நாயே! ஒருஎட்டு முன்வைத்தே, சாத்தையனுக்கு ஏற்பட்டதுதான் உனக்கும்!’’இன்னாசியின் இடதுகை வயிற்றின் காயவடுவைத்தொட்டுக்கொண்டிருந்தது. வலதுகை எந்தவிதமான அசைவும் காட்டாமல் உடலோடு ஒட்டி பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தது. அவனது கண்கள் அல்லியையே பார்த்துக் கொண்டிருந்தன. அல்லி அவன் அசைவை எதிர் பார்த்து தன் முழுச் சுதாரிப்புடன் நின்றாள். இருந்தாற் போலிருந்து ஒரு இடிச் சிரிப்புச் சிரித்தான் இன்னாசி. அல்லி திடுக்கிட்டுப்போனாள். அந்தப் பழைய சிரிப்பு!

ஆனால் இந்தச் சிரிப்பில் அலட்சியமும் பரிகாசமும் தான் தொனித்தன. பழைய வெறியைக் காணவில்லை அல்லி. அந்தச் சிரிப்புஎழுந்தவாறே சட்டெனதணிந்தும்விட்டது. இன்னாசி அல்லி’ என்று அழைத்தான். அந்த அழைப்பில் எந்த வித வேகமும், அதைத் தொடர்ந்து வந்த பார்வையில் எந்த வெறியும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/149&oldid=1337607" இலிருந்து மீள்விக்கப்பட்டது