பக்கம்:ஆடும் தீபம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

ஆடும்


 யாரோ ஒருவன் அல்லியை இனம் கண்டு கொண்டான்...! அவள் தன்னைத்தானே குனிந்துபார்த்த சமயத்தில், அவளுக்குத் தன்னை இனம் காண முடியவில்லை. மாங்குடியிலிருந்து பட்டணத்துக்கு வந்த பொழுதில் அணிந்திருந்த அதே கொட்டடி ரவிக்கையையும் கூறை நாட்டுப் புடவையையுமே இப்போதும் அவள் அணிந்திருந்தாள். இடைவேளையில் சுருண்டு கொண்ட-சுருட்டப்பட்ட கேசத்தின் இழைகள் சிதறியும் சிதறாமலும் இருந்தன. துறவு நிலையில் அவள் இருந்தாள். கடைசியாக அவள் நடித்து முடித்த துறவுக் கோலம் கருத்தில் நிழலாடியது. “எல்லாவற்றையுமே நான் துறந்து நிற்கும் ஓர் அபலைப் பெண். பிறந்த மண்ணைப் பிரிந்தேன்; பெற்ற தாயும் தந்தையும் என்னை விட்டுப் பிரிந்தார்கள்; நட்புக்கு ஒருவராய்த் திகழ்ந்த உயிர்த்தோழியைத் துறக்கும் கட்டம் வந்தது: குறுக்கிட்ட காதலைத் துறந்தேன்; வழி மறித்த பாசத்தையும் இழந்தேன். நான் இப்போது ஓர் அனாதை போக்கிடம் ஏதும் புலப்பட மறுக்கும் அபாக்யவதி; பெண்ணாய்ப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டுமென்று பெருமை கண்ட தமிழ் மண் தான் இப்போது என்னையும் உன்னிடம் அடைக்கலம் தேட வழி காட்டியிருக்கின்றது தாயே..! பொங்குமாங் கடலின் பாதத்தில் நின்று பொங்கும் உள்ளத்துடன் குமுறிக் கதறிக் கண்ணீர் கக்கிய திரைப்படக் காட்சி நினைவில் சொடுக்கப்பட்டது. காலடியில் கிடந்த கிழிசல் கோணிப்பை அவளுக்குச் சுய நினைவை அளித்தது; வழிப் பயணத்துக்குச் சீட்டு வாங்க நினைத்தவள் திரும்பினாள்: வேகமாக நடந்தாள் பஸ்கள் குறுக்கிட்டன; அவள் அவற்றை ஒரு பொருட்டெனக் கருதினால்தானே? விரக்திக்குக் கண் இல்லை!

அக்கா!...அல்லி அக்கர்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/173&oldid=1389302" இலிருந்து மீள்விக்கப்பட்டது