பக்கம்:ஆடும் தீபம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

23


 அல்லிக்கு வசூல் சாஸ்தி’ என்று நாலும் இரண்டும் படித்தவர்கள் (நாலடியாரையோ குறளையோ படித்தவர்கள் என்று மயங்கவேண்டாம்) பேசிக்கொண்டார்கள்.

அல்லிக்குக் காது செவிடில்லையே! எல்லாம் விழுந்தன. இடியும் விழுந்தது. வீட்டைச்சாத்திக் கொண்டு குன்றிப் போய்க் கிடப்பாள். செந்தாமரை உசுப்பிப் பார்த்து விட்டுச் சிணுங்கிக்கொண்டு போவாள். வெண்டியப்ப அண்ணன் வருவார். போம்மா, போக்கத்தபெண்ணே! ஊருக்கு வாய் கொழுத்தா, அதுக்காக நீ பட்டினி கிடந்து சாகணுமா? ஊரை விட்டுத்தள்ளு...... குப்பை! எழுந்திருந்து உலையை வை” என்று சமாதானப் படுத்துவார். குன்றியவள் எழுந்து நிமிர்ந்து உட்காருவாள்.

அந்த அண்ணன்தான் கண்மாயில் கயிறைவிட்டெறிந்து பேசினார். செந்தாமரையைக்கூட அறிவில் மூத்த தலையாக எண்ணி இருந்தது தவறுதான். அவள் என்ன பேச்சுப் பேசிவிட்டாள்? இனிமேல் எந்தப்பிடிப்பை வைத்துக் கொண்டு இங்கே குப்பை கொட்டுவது?

‘அல்லி ஞாபகம் இல்லையா? சொக்கப்பனை கொளுத்தறப்போ ஊரே பிள்ளையார் கோயில்லே இருக்கும், அப்போ நான் வருவேன்!"-வாசலிலிருந்து ஒரு கனைப்புக்குப்பின் இந்தப் பேச்சு உள் நுழைந்து வந்தது.

பேசுபவன் இன்னாசி அல்லவா? இரண்டாவது எச்சரிக்கையா?

அல்லி எழுந்து உட்கார்ந்தாள்.நடுங்க வேண்டிய மனம் நடுங்கவில்லை. ஆடவேண்டிய உடல் ஆடவில்லை. நிறுத்தி வைத்த எல்லை அம்மன் சிலையைப்போலச் சலனமற்றிருந்தாள். ஒரே விநாடிதான் அப்படி. அதற்கப்புறம் ஆயிரமாயிரம் அலைகள் விட்டு எறியும் கடலைப் போலாயிற்று நெஞ்சம். அதிலே பெரும் திமிங்கிலமாக நீந்தினான் இன்னாசி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/24&oldid=1389740" இலிருந்து மீள்விக்கப்பட்டது