பக்கம்:ஆடும் தீபம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

33


நம்பிக்கையும் அளித்த பெரியவரும் அந்நியராகி விட்டார்கள். அவளுக்கு இனி அவர்கள் செத்தவர்களே! அதனால் அவள் தன் தனிமையை, அபலைத் தன்மையை, அனாதை நிலையை மிக அதிகமாக உணர்ந்தாள். அன்பு வறண்டுவிட்ட அந்த ஊர் திடீரென்று நம்பிக்கையையும் வறள வடித்து விட்டது. அச்சத்தை விதைத்தது. யாரும் அறியாதபடி இரவோடு இரவாகத் தப்பிவிடலாம் என்று துணிந்து வெளியேறினாள்.

அவள் எண்ணம் எவ்வளவு தவறானது இருட்டிலே பூனையும் ஆந்தையும் விழித்திருந்து அனைத்தையும் கவனிக்க முடிவது போல, இரண்டு பேர் அவள் செயல்களைக் கவனித்திருக்கிறார்களே; அவளறியாமல் அவளைத் தொடர்ந்து வந்து பிடித்தும் விட்டார்களே!

அல்லியின் உடல் பயத்தால் மீண்டும் குலுங்கியது. அவள் பாம்புக்கும் கொடிய விலங்குக்கும் பயப்பட மாட்டாள். பேய் பிசாசுக்கும் பயப்படமாட்டாள்தான். ஆனால் இப்போது மனிதரைக் கண்டு பயப்பட்டாள்.

மனிதர்களா அவர்கள்? வெறிபிடித்த மிருகங்கள்! ... ...இல்லை. அவற்றிலும் கேவலமானவர்கள்!

பெண் இனத்தை வசீகரிக்க-மோகம் எழுப்ப-ஆண் மிருகங்கள் சண்டையிடக்கூடும். இவர்களோ? துணையற்ற-அவர்களிடம் அன்பு காட்டும் மனமற்றபேதைப் பெண்ணின் இளம் உடலை ருசிக்கும் உரிமைக்காக ஒருவரை ஒருவர் முறைத்தார்கள். எரித்து விடுவது போல் வெறித்துப் பார்த்தார்கள். உறுமினார்கள்.

ஒளித்திருநாளாம்! எங்கெங்கும் விளக்குகளாம்! ஊராரின் மனசிலே ஒளி இல்லையே! மனிதரின் உள்ளத்தில் இருள் தானே மண்டிக்கிடக்கிறது! தன்னந் தனியளாகிவிட்ட ஒற்றைப் பெண் பயப்படாமல் என்ன செய்ய இயலும்?

‘டேய்... ... இன்னாசி!”