பக்கம்:ஆடும் தீபம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஆடும்

அவள் தன் அதிர்ஷ்டத்தை எண்ணிச் சிறிது மகிழ்வு கொள்ளத் தவறவில்லை.

அவளுக்குப் பின்னால் மாங்குடியின் மக்கள் கொளுத்திய சொக்கப் பனையின் ஒளிவீச்சு வானவெளியில் செஞ்சாயம் தடவியது. செம்புள்ளிகளும் கிருமிகளும் போல் கொள்ளித் துகள்கள் மிதந்து நெளிந்து, மேலே எவ்வின. அந்த அற்புத காட்சியைக் காணக் கண் இல்லை அவளுக்கு. இன்னாசியும் சாத்தையாவும் சண்டை போடுகிறார்களா, நிறுத்தி விட்டார்களா என்று கவனிக்க மனமுமில்லை

“அவர்கள் தப்பித்துக்கொண்டு வராதிருக்கவேண்டுமே, கடவுளே’ என்ற பிரார்த்தனை இருந்தது அவள் உள்ளத்தில். மேடு பள்ளம் பாராமல், கல்மண் கவனியாமல், ஒடுவதற்குப் பலம் இருந்தது அவள் கால்களில்,

பாதை நீண்டது. இரண்டு மைல் நீளம் கடந்த வண்டிப்பாதை அவளுக்கு முடிவற்றது போல்தோன்றியது. ஓடியும் ஒட முடியாத போது நடந்தும்-ஆனால் நிற்காமல் திரும்பிப்பார்க்காமல்-அவள் அதன் முடிவைக் காண

முயன்றாள்.

இயற்கை தூங்குவதே இல்லை. அமைதி நிறைந்ததாக சொல்லப்படுகிற இரவின் சாமத்திலே கூடத் தூங்குவதில்லை. இப்பொழுது கண்ணுக்குப் புலனாகாத வண்டுகளின் இரைச்சல் ஓயாது ஒலித்துக்கொண்டிருந்தது. எங்கோ ஒருமரத்தில் ஏதோ ஒரு பறவை, கண் மயக்கத்தில் கீழே விழுந்தெழுந்து பின் சமாளித்துக் கொண்டது போல், இறக்கைகளைப் படபடவென அடித்தது. ஆந்தை அலறியது.

அல்லி அவற்றையெல்லாம் கவனிக்கவில்லை. பயத்தால் துடித்த அவள் உள்ளத்தில் ஓர் எண்ணம் ஏக்க