பக்கம்:ஆடும் தீபம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஆடும்


அடைந்தாள்-இருள் தேடிக்காத்திருப்பதற்காகத்தான்.

இருளரக்கனின் பயங்கரப் பெருமூச்சுப்போல தூரத்தில் லேசாகக்கேட்க ஆரம்பித்தது. முன்னேறி வந்துகொண்டிருந்த வண்டித் தொடரின் இரும்பு ஒலி கொஞ்சம் கொஞ்சமாகக் கனமேற்று, வலுப்பெற்று பெரும் சிரிப்பாய், வேக இரைச்சலாய் வளர்ந்தது. தூரத்தை விழுங்கிவிட்டு, இன்னும் எவ்வளவோ தூரத்தை விழுங்க வேண்டிய துடிப்புடன் வந்த ரெயில் வண்டி சிரம பரிகார மாகச் சற்றே நின்றது அந்தச் சிறு நிலையத்தில்.

சிலர் இறங்கினார்கள். இறங்கியவர்களைவிட அதிகமான பேர்கள் ஏறினார்கள், உள்ளே புகுந்து விட்டால் எப்படியும் இடம் பிடித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு, நம்பிக்கைதானே மனிதர்கள் வாழ்ந்து அவதிப்படுவதற்குத் தெம்புதரும் ஜீவ சக்தியாகத் திகழ்கிறது!

அல்லியும் ஒரு பெட்டிக்குள் ஏறிவிட்டாள். ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு அசைய ஆரம்பித்த வண்டித்தொடர் நெடுமூச்சு விட்டபடி , காலத்தைக் கொல்லமுயன்று தூரத்தை மென்று துப்பிக்கொண்டு முன்னே, முன்னே ஓடியது. அல்லி இழந்த தைரியம் எங்கிருந்தோ, எப்படியோ வந்து அவள் உள்ளத்தில் புகுந்துவிட்டது.

‘ஒரு மாதிரியாகத்தப்பியாச்சு. இனிமேல் பயமில்லை!’ என்று முச்சுவிட்டாள் அவள். அவள் கண்கள் ரயில் வண்டியின் மங்கலான விளக்கொளியில் குறிப்பற்றுச் சுழலும் குருட்டு வண்டுகளாயின. அங்கு எவ்வளவோ பேர் எப்படி எப்படியோ இருந்தார்கள். ஆனால் அவளுக்குத் தெரிந்தவர் ஒருவருமே இல்லை. இனம் தெரியாத முகங்களுக்கு மத்தியில் தன்னந் தனியாக நின்ற அவளுக்கு அதுவே ஒரு பலமாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/39&oldid=1243881" இலிருந்து மீள்விக்கப்பட்டது