பக்கம்:ஆடும் தீபம்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

39


எண்ணத் தொடங்கினால் அதுவே பலவீனமாகவும் தோன்றியது. மனிதக் காட்டிலே திக்குத் தெரியாமல் திண்டாடும் இளம் மானாய் மிரளமிரள விழித்தாள் அவள். அந்த வண்டியில் மட்டும் தான் அவள் நிலை அப்படி என்பதில்லையே! ஊரிலும் உலகத்திலும் அல்லியின் அந்தஸ்து அதுதானே? தன்னையே-தனது தனித் தன்மையை ஊருக்கு உணர்த்த முயன்று, தனக்கென இடமின்றி, தனக்குரிய இடம்தான் எதுவெனப் புரியாது தன்னந் தனியாகிவிட்ட அபலைதானே அவள்.

இறந்த கால வாழ்வுபற்றி இனி எண்ணுவதில்லை என்று தீர்மானித்தாள் அல்லி-கற்பலகையில் தவரறாகவோ, சரியாகவோ போட்டிருந்த கணக்கை, எச்சிலைத் துப்பியோ அல்லது ஈரத்துணி தடவியோ அழித்துவிட்டுப் புதுக்கணக்குப்போட ஆசைப்படும் சிறுமிபோல. ஆனால் எதிர்காலம் அவளுக்காக என்ன வைத்துக்கொண்டு, எப்படிக் காத்திருந்தது என்பதை உணரத் துணைபுரியும் சிறு ஒளிக்கோடுகூட அவளது சித்த வெளியிலே மின் வெட்டவில்லை.

நிகழ்காலம் ரெயில் தொடரின் வேகத்துக்கேற்ப ஓடிக்கொண்டிருந்தது. ரயில் வண்டியோ, கடமையைச் செய்; பலனைக் கருதாதே’ என்று உபதேசித்த கீதாசிரியனின் உண்மையான சீடன் போல் இயங்கியது.

வேறொரு சமயமாக இருந்தால், அல்லி,சாளரத்தின் வழியாக வெளியே பார்த்து அனைத்தையும் கவனித்திருப்பாள். பாதை நெடுகிலும் அலங்கோலமாய் நிற்கும் ரயில்வேக் கற்றாழை மீது ஒளியும் நிழலும் சித்தரித்த காட்சிகளையும் வெள்ளி நிலவில் குளிக்கும் இன்பத்தில் சொக்கிய சூழ்நிலையையும் வேடிக்கை பார்த்திருப்பாள். இப்போது அவளுக்கு அதிலெல்லாம் நாட்டம் இல்லை. ரயில் நின்றதையோ, கிளம்பியதையோ, ஸ்டேஷன்கள் வந்ததையோ, போனதையோ அவள் கவனிக்கவில்லை.