பக்கம்:ஆடும் தீபம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 ஆடும்

கிழவி கலை உள்ளம் படைத்தவள். பெரிய ரசிகை. அவள் வியந்தவாறு நின்றபோது, ராஜநாயகம் அங்கு வந்து, ‘நாச்சியாரம்மா, இது ஒரு புதுப் பொண்ணு. பட்டிக் காட்டிலே வளர்ந்த பொண்ணுன்னு அதன் பார்வை யைப் பார்த்தாலே தெரியுது. மாடியிலே நம்ப ராஜ வல்லியின் அறையை இதுக்கு ஒழிச்சுக்கொடு,’ என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டார்.

மாங்குடியிலிருந்து வயலிலும், வரப்பிலும் நடந்து வந்த களைப்பு வேறு, இரவின் இருளில் காமத்தால் சிவந்திருந்த நான்கு கொள்ளிக் கண்களின் பார்வையை விட்டு விலகி ஓடிவந்த பதைப்பு வேறாக, அவள் மாடி அறையில் சாப்பிட்டுப்படுத்தவள்தான்; உறக்கம் இமைகளைத் தழுவ, உள்ளம் சற்றே ஆறுதல் அடைய, பகல் பொழுது மேற்கே சரிந்து போவது கூடத் தெரியாமல் தூங்கிப் போனாள்.

பளபளவென்று தங்கம்போல் மின்னும் ரெயில் பெட்டி ஒன்றில் அவளும் அவனும் , அதுதான் அருணாசலமும்திசை தெரியாமல் எங்கோ பிரயாணம் செய்துகொண்டிருந்தனர். ரெயிலின் இருபக்கங்களிலும் கண்ணாடிப் பலகை போல் தெளிந்த நீர் நிலைகள். அங்கே பூத்துக் குவிந்திருக்கும் அல்லி மலர்கள்! வெண் தாமரைகள் வானத்தில் உலவும் கதிரவனைப் பார்த்து இதழ்கள் விரித்து அவை ஆடும் அழகை அல்லி கண் கொட்டாமல் பார்த்து வந்தாள். எங்கோ பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் சுடர்விடும் அந்தக் கதிரவனிடம் அவற்றுக்கு எத்துணைக் காதல் என்று வியந்தாள் அவள். அருணாசலம் அவளுக்கு அண்மையில் உட்கார்ந்து அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு வந்தான். இருவருமே பேசவில்லை. சொல்லால் அளக்கமுடியாத அவர்களின் இரு உள்ளங்களும் அளந்து பார்த்துக்களித்துக் கொண்டிருந்தன.