பக்கம்:ஆடும் தீபம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

61


நன்மையே செய்துவிட்டதாக அவள் நினைத்தாள். இன்னாசி மட்டும் அப்படி விரட்டி அடிக்காமல் இருந்தால், அந்த மாங்குடிக் கிராமத்தின் வம்புச் சேற்றுக்குள் அழுந்திக்கிடந்து உழலவேண்டியதுதான். தீமையில் நன்மை ஒளிந்து கிடக்கும் விந்தையை அறிந்து கொண்டாள் அல்லி. கார்த்திகைத் தீபம் அவளை ஊரை விட்டு விரட்டினாலும், தைப் பொங்கலை அவள் வெகு விமரிசையாகத் தன் ஆசிரியருடன் கொண்டாடினாள். ராஜநாயகம் தம் மகளைப் போலவே நினைத்து அல்லியிடம் அன்பு செலுத்தினார். நாச்சியாரம்மாவுக்கு ராஜநாயகம் இப்படித் திடீரென்று மாறிப்போனது வியப்பாகத்தான் இருந்தது. பெண்களைப் பார்த்துச் சிரித்துக் கேலி செய்தவர் முற்றிலும் புதிய தோரணையுடன் நடந்து கொண்டார். அன்று கன்னிப் பொங்கல். திரள் திரளாக மக்கள் சென்னையைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பியிருந்தனர். கட்டுச்சோறும் புதுச்சேலையும், கொண்டையில் மருக் கொழுந்துக் கதம்பத்துடன் பெண்களும், புது வேட்டியும் சட்டையுமாக ஆண்களும் கடற்கரை என்றும், காட்சி சாலை என்றும் சுற்றிச் சுற்றி வந்தனர். அல்லி, மாடி அறை ஜன்னல் அருகில் நின்று தெருவிலே செல்பவரைக் கவனித்தவாறு இருந்தாள். வாத்தியார் ஐயா யாரோ ஒரு பணக்காரப் பெண்ணுக்கு நாட்டியம் பயில்விக்க வெளியே போயிருந்தார். நாச்சியாரம்மாள் தன் வழக்கப்படி அண்டை வாசலில் பேசப் போய் விட்டாள். தொலைவில் தெரியும் மாளிகைகளும், எழும்பூர் ரெயில் நிலையமும், தூங்குமூஞ்சி மரங்களும் மாலைச் சூரியனின் மஞ்சள் ஒளியில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/62&oldid=1298990" இலிருந்து மீள்விக்கப்பட்டது