பக்கம்:ஆடும் தீபம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீபம்

75


நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் ராஜ நாயகம். தீப வரிசைகள் சூழ ஆனந்த நடனமிடும் நிருத்தியக் கடவுளின் முன்பு அவரவர்கள் கற்ற கலையைக் காணிக்கையாக்கி மகிழ்ந்து குருவின் ஆசி பெற்றுப்போக வந்திருந்தார்கள் அவர்கள். ராஜ நாயகம் கூடச் சொல்லியிருந்தாரே, அல்லி, இன்று மாலையில் உன் ஆட்டம் பிரமாதமாக இருக்கவேண்டு மென்று? -அது அல்லிக்கு இப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. சந்திரகாந்தக்கல் பட்டவுடன் இரும்பு ஒளிபெற்று உருகுவது போல் அருணாசலத்துடனிருக்கும் அவளும் அவனது இயல்போடு ஒன்றி விடு கிறாளே . உலகமே மறந்து விடுகிறதா என்ன...?... ஆசிரியரின் உத்தரவு உலகிற்குள் அடங்கியதுதானே? அதையும் சுலபமாக மறந்து அவனோடு கிளம்பி விட்டாள் போலும்!

நீலாவை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கண்சிமிட்டிய படியே ‘ஏன் அல்லி, நீ இப்பொழுது தான் வருகிறாயா ‘-என்றாள் காமினி. ‘அவளுக்கென்னடியம்மா, நம்மைப்போலவா அவள்?’’ இது நீலா. தொடர்ந்து ஜலதரங்கத்தை துரிதகதியில் தட்டி விட்டது போல் நால்வரும் கூட்டுச் சிரிப்புச் சிரித்தனர். சிரிப்பா அது?

அல்லியின் ரத்த நாளங்கள் சுண்டின. ஐயோ உலகமே! எந்தப் பக்கம் திரும்பினாலும் உனக்குத் தப்புக் கணக்குத்தான் போடத் தெரியுமோ? உண்மையை உணர உனக்கு சக்தியற்றுப் போகக் கடவது என்று கண்ணகி சபித்தாளா? கற்புக்கரசியின் வாக்கு பொய்க்க லாகாதென்று நீ வாளாவிருக்கின்றாயா?.