பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

இத்துடன், அவன் வள்ளுவன் சொன்ன மற்றொரு உண்மையையுமே நன்றாக அறிந்தவன். இவ்வுலகத்தின் செலாவணி நாணயம் பொருள். அது போல பேரின்ப உலகத்திற்குச் செலாவணி நாணயம் அருள். இரண்டும் இல்லாமல் வாழ்வு பூர்த்தியாகாது.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம்
இல்லை. பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி ஆங்கு

என்று தெரியாமலா சொன்னான் வள்ளுவன். இதைத் தெரிந்து முருகனே அருளையும் பொருளையும் சேர்த்தே மக்களுக்கு வழங்க, ஆண்டியாக வேடம் புனைந்து ஆண்டவன் ஆகிறான்; ஞானப் பழமாக, ஞானபண்டிதனாக நின்று, நமக்கெல்லாம் ஞானம் புகட்டுகிறான்; மங்கையர் இருவரை மணந்து நல்ல மணவாளன் ஆகிறான்; செல்வம் கொழிக்கும் சீரலை வாயிலில் சிறந்த செல்வனாகவே வாழ்கிறான். எல்லாம் மக்கள் இனம் உய்யத்தான்.

இப்போது பெறுகிறோம் விடை, ஞானப்பழமாக நிற்கும் பழனியாண்டவனை நமது பூசையில் வைத்து வணங்கலாமா, வணங்கக் கூடாதா? என்ற கேள்விக்கு. இன்னும் ஆச்சரியம், பழனியாண்டவன் நல்ல மொட்டை ஆண்டி என்றுதானே நேரில் சென்று தரிசித்தவர்களும் பின்னர் கடைகளில் படங்களை விலைக்கு வாங்கியவர்களும் அறிகிறோம். உண்மையில் அவன் மொட்டை ஆண்டி அல்ல அப்பனைப் போல் சடையாண்டியே என்று சொன்னால் பலர் நம்ப மாட்டீர்கள். ஆனால் சமீபகாலத்தில், கோயில் நிர்வாகிகளின் வேண்டுகோளின்படி ஆண்டவன் அருகிலேயே சென்று அவன் திருக் கோலத்தைக் கண் குளிரக் கண்டு, அதை