பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

தம்ப புத்திரிகளை வர்ணிக்கிறது. இன்னும் கிருஷ்ண மிகிரர் எழுதிய பிரபோத சந்திரோதயத்திலும் இந்த சலபாஞ்சிகைகளைக் காண்கிறோம்.

சிற்பக்கலை உலகில் நுழைந்தாலும், இந்த சலபாஞ்சிகளைப் பல கோலங்களில் காணலாம். பர்ஹீத், சாஞ்சி ஸ்துபங்களிலும் இந்த மடக்கொடியார் இருப்பதைக் காண்போம். சாஞ்சியில் உள்ள கீழ்ப்பக்கத்து வாயிலில், அசோக மரத்துக் கொம்பு ஒன்றைப் பற்றி, ஒயிலாகச் சாய்ந்து நிற்கும் பெண் கொடியையே பார்க்கிறோம்.

ஆனால் இந்த சலபாஞ்சிகைகளின் சிறந்த வடிவினைக் காண, நாம் தமிழ்நாட்டிற்குத்தான் வந்தாக வேண்டும். நேரே கும்பகோணம் போய், அங்கிருந்து வடக்கே மூன்று மைல் சென்று திரிபுவனம் என்ற தலத்திற்கு வரவேண்டும் அங்கே திரிபுவனச் சக்கரவர்த்தி என்று அபிஷேகப் பெயர் சூடிக் கொண்ட மூன்றாம் குலோத்துங்கன் கட்டிய கம்பஹரேஸ்வரர் கோவிலுக்கே செல்ல வேண்டும். அங்கு மூலக் கோயிலில் இருக்கும் நடுக்கம் தீர்த்த பெருமாளையும், அவரது துணைவியாம் தர்மசம்வர்த்தனியையும் கண்டு தொழுவதை ஒத்திப் போட்டு விட்டு, கோவிலின் வடபக்கத்தில் கட்டப்பட்டுள்ள சரபர் சந்நிதிக்குள் நுழைய வேண்டும். அப்படி சென்று சேர்ந்தால் அங்குள்ள முக மண்டபத்தில் சரபர் சந்நிதி வாயிலில், இரண்டு பெண் வடிவங்கள் நிற்பதைக் காண்போம். இவைதான் சலபாஞ்சிகை வடிவங்களிலேயே சிறந்த வடிவங்கள் என்று நான் கூறாமலேயே நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்!

இருவரும் கொடி தாங்கி நிற்கும் கொடிகளாக இருப்பதையுமே பார்ப்பீர்கள். இருவரும் நான்கு நான்கரை அடி உயரத்தில் நல்ல உயிர் ஓவியங்களாக நிற்கின்றனர்.