பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மணிவாசகர் கண்டதில்லை


உருத் தெரியாக் காலத்தே
உள் புகுந்து என் உளம் மன்னிக்
கருத்திருத்தி ஊன் புக்குக்
கருணையினால் ஆண்டு கொண்ட
திருத்துருத்தி மேயானைத்
தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாபடியேன்
அணிகொள் தில்லை கண்டேனே

என்பது மணிவாசகர் பாடிய பாடல். திருப்பெருந் துறையிலே குருந்த மரத்தடியிலே தன்னை வலிந்து ஆட்கொண்ட பெருமானை, அப்பெருமானோடு இணைந்து அவர் அருளிய சிவபதத்தின் அருமையை எல்லாம் தான் தில்லையிலே கண்டு கொண்டதாக மணிவாசகர் பாடுகிறார். மணிவாசகருக்குத் திருப்பெருந்துறைக்கு அடுத்த படியாக தில்லையில் ஈடுபாடு அதிகம் இருந்திருக்கிறது. ஆதலினால்தான் "தில்லை பாதி திருவாசகத்தில்" என்ற பழமொழியே எழுந்திருக்கிறது.

தில்லை மூதூர் ஆடிய திருவடியிலே அளவிலா ஈடுபாடு உடையவராய் இருந்திருக்கிறார். திருப்பெருந்துறையை விட்டுப் புறப்பட்ட மணிவாசகர் உத்தரகோச மங்கை, திருவிடைமருதூர், திருவாரூர், திருமுதுகுன்றம், திருவண்ணாமலை எல்லாம் சென்றபின் தான் திருத்தில்லை வந்து அடைந்திருக்கிறார். அங்கு தான் திருவாசகத்தை மணிவாசகர் சொல்லச் சொல்ல, சிற்றம் பலவன் ஏட்டில் எழுதினான் என்பது வரலாறு.