பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிறவாப் பெருமையும்
இறவாப் புகழும்

துரையில் ஒரு வைத்தியர். சித்தவைத்திய முறையைக் கையாளுபவர்தாம். பரம்பரையாக வைத்தியம் செய்பவர்கள் அவருடைய குடும்பத்தார். அவர் பெயர் சொக்கலிங்கம். தகப்பனார் பெயர் வீரபத்திரன். இந்த சொக்கலிங்கம், கவிஞர் ஒருவருக்கு வைத்தியம் செய்தார்.

கவிஞர் சிறு வயதுடையவர்தாம் என்றாலும் அவருக்கு வந்திருந்த வியாதி கடுமையானதாக இருந்தது. நாற்பது நாள் படுக்கையிலேயே கிடந்தார். வைத்தியரோ தினமும் யமனுடனேயே போராடிக்கொண்டிருந்தார். பல தடவை சித்திரபுத்திரன் கூடக் கவிஞர் சீட்டைக் கையில் எடுத்து விட்டான். வைத்தியருடைய திறமைக்கு அஞ்சி அஞ்சியே எடுத்த சீட்டைக் கிழிக்க முடியாமல் இருந்து விட்டான்.

யமனுக்கும் வைத்தியருக்கும் நடந்த போட்டியில் கடைசியில் வைத்தியரே வெற்றி பெற்றார். கவிஞர் பிழைத்து எழுந்து விட்டார். வியாதி முற்றும் குணமாகித் தலைக்குத் தண்ணிரும் விட்டாகி விட்டது.

இதன் பின் சில தினங்கள் கழித்து, வைத்தியர் கவிஞரைப் பார்க்க வந்தார். ஒரு பெரிய தட்டில் தாம்பூலம், பழம் எல்லாம் வைத்து வைத்தியரை உபசரித்தனர் கவிஞருடைய வீட்டார். கவிஞருக்கும் நன்றி உணர்ச்சி அதிகம் இருந்தது. உளம் நிறைந்த அன்போடு, கவிஞர் வைத்தியருடைய சேவையைப் பாராட்டினார்.