பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

119


இந்த மண்டபங்களைக் கடந்து கர்ப்பக்கிருகத்துக்கே சென்றோம். அங்கே கோயில் கொண்டிருக்கும் சுயம்பு லிங்கத்துக்கு பட்டீசர், பட்டிநாதர், கோட்டீசர் என்றெல்லாம் பெயர்கள் வழங்குகின்றன. அன்றொருநாள் காமதேனுவின் கன்று இந்தப் போரூர்ப் பகுதியான பிப்பிலாரண்யத்தில் துள்ளி விளையாடியபோது, அதன் முன்கால்கள் ஒரு மண் புற்றுக்குள் சிக்கிக் கொள்ள, அந்தக் கன்றின் அலறல் கேட்டு அதனை விடுவிக்க வந்த காமதேனு தன் கொம்பால் அந்த புற்றை முட்ட, அந்தப் புற்றிடத்தே முளைத்திருந்த சிவலிங்கத்தின் தலையில் காமதேனுவின் கொம்புபட்டு ரத்தம் பீறிட்டது என்றும், அதைக் கண்டு காமதேனு வருந்த, அங்கே சிவபெருமான் காமதேனுவுக்கு நேரில் பிரத்தியகூஷமாகக் காட்சிகொடுத்தார் என்றும் தலபுராணம் கூறுகிறது.

புராணவரலாறு எப்படி இருந்தாலும் இருக்கட்டும். கன்றினது காற்குளம்பின் சுவடுகளும் பசுவின் நுனிக் கொம்பின் சுவடும் இன்னும் சிவலிங்க உருவின் சிரசில் அடையாளமாகக் கொண்டதால் கோட்டீசர் என்றும் பெயர் பெற்றுள்ளார் இறைவன் என்று தெரிகிறது. காஞ்சியில், அம்மையின் முலைத்தழும்பையும் வளைத் தழும்பையும் ஏற்றவனே இங்கு, காமதேனுவின் காற் குளம்பின் தழும்பையும், கொம்பின் நுனித் தழும்பையும் ஏற்று நிற்கிறான். தழும்பேறிய அந்தத் திருவுருவைக் கண்டு தரிசித்து, நாத்தழும்பேற அவன் புகழ் பாடி மகிழ்ந்தால், பிறவா நெறி பெறலாம் என்று கூறுவதில் ஒரு வியப்பும் இல்லை யல்லவா!

பட்டீசரை வணங்கியபின் பச்சை நாயகியையும் வணங்கினோம். இரண்டு கோவிலுக்கும் இடையேயுள்ள கல்யாண மண்டபத்திற்குள்ளும் நுழைந்து அங்கே இரும்புக் இராதிகளுக்குள்ளே சிறை செய்து வைத்திருக்கும்