பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒன்றரைக் கண்ணன்

ண்ணரைக் கண்ணன் வருகிறான், தூங்கப்பா தூங்கு, இது என் தாயார் நான்சிறு பிள்ளையாகத் தொட்டில் கிழிய உதைத்துத் தூங்காமல் அடம் பண்ணியபோது. என்னைப் பயமுறுத்தித் தூங்க வைப்பதற்காக உபயோகித்த பிரயோகம்.

ஒண்ணரைக்கண் டோரியா, சென்னைப் பட்டணம் வாரியா. இது நான் பள்ளிக்கூடச் சிறுவனாகக் கும்மாளி போட்டு விளையாடும்போது உபயோகித்த அர்த்தமில்லாத வார்த்தைகளைக் கொண்ட பாட்டு.

ஆனால் இப்போதுதான் அறிகிறேன் ஒன்றரைக் கண்ணன் என்ற பெயர் எல்லாம் வல்ல இறைவனாம் சிவபிரானுக்கு உரிய ஒரு பெயரென்று. உண்மையில் இதை நான் கேலியாகச் சொல்லவில்லை. அப்பர் பெருமானே இதை வெகு அழகாகச் சொல்கிறார்.

ஒரு பாட்டு

இன்று அரைக்கண் உடையார்
எங்கும் இல்லை, இமயம் என்றும்
குன்றரைக் கண்ணன் குலமகள்
பாவைக்கு கூறுஇட்ட அந்நாள்
அன்று அணுக் கரை கொடுத்து
உமையானையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர்
ஒற்றியூர் உறை உத்தமனே.