பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128 ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

நேரே பின்புறம், மேற்கே பார்த்த திருவுருவமாக அர்த்த நாரி அமைந்திருக்கும். அந்த இடத்திலேதான் பிந்திய சோழர், லிங்கோத்பவரை நிறுத்தியிருக்கிறார்கள். அதையும் மாற்றி அமைத்திருக்கிறார்கள், நாயக்கர்கள் விஷ்ணுவின் சிலையை வைத்து.

தமிழ்நாட்டில். இந்த அர்த்த நாரியின் சிலா உருவம் படிப்படியாக வளர்ந்திருக்கிறது. பாலாற்றின் மருங்கிலே கலை வளர்த்தவர்கள் பல்லவ அரசர்கள். அவர்களில் முதன்மையானவன் மாமல்லன் என்னும் நரசிம்ம வர்மன்.

அவன் உருவாக்கியதுதான் மாமல்லபுரம். அங்குள்ள பாண்டவர் ரதங்களில் முதலாக நிற்கும் தருமர் ரதத்தின் பின் பாகத்திலே அன்றையச் சிற்பி அர்த்த நாரியை உரு வாக்கியிருக்கிறான். உச்சந்தலையிலிருந்து உள்ளங் கால் வரை ஒரு கோடு இழுத்துக் கொண்டான் சிற்பி. வலப்பக்கம் ஆண் என்று ஒதுக்கிக் கொண்டான். மழுவையும் கையில் கொடுத்தான். குழையைக் காதில் பொருத்தினான். அபயகரத்தைத் தூக்கி நிறுத்தினான். இடப்பாகத்திலே பெண்ணின் தலையை யெல்லாம் ஏற்றினான். குழைக்குப் பதில்தோடு, ஒன்றும் இல்லாத மூக்கிலே ஒரு நத்து, கையிலே ஒரு செண்டு, எல்லாவற்றையும் விட விம்மிப் பெருத்த மார்பகம் என்றெல்லாம் அமைத்து உருவாக்கி விட்டான். இவனுக்கும் தெரிந்திருக்கிறது, பெண்ணின் இடை ஆணின் இடையை விடச் சிறுத்த தென்று. என்றாலும் அதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

இதற்கு அழுத்தம் கொடுக்கிறான் காவிரிக் கரையிலே பின்னால் தோன்றிய கலைஞன். சோழ சாம்ராஜ்யம் மகோன்னத நிலையில் இருந்தபோதுதான் சோழ வள நாட்டில் எண்ணிறந்த கோயில்கள் தோன்றியிருக்கின்றன.