பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

129

எண்தோள் ஈசனுக்கு எழில் மாடம் எழுபதல்லவா கட்டினான், சோழன். அவன் வழிவந்தவர்களும் கொஞ்சமும் சளைக்காமல் கல்லாலே கட்டி முடித்திருக்கிறார்கள் 'எத்தனை எத்தனையோ கோயில்களை. அதில் ஒரு கோயில் கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோயில். அங்கும் கர்ப்பகிருஹத்தில் மேல்சுவரில் ஒரு சிலை; அர்த்தநாரியின் சிலை.

அந்தச் சிலை மிகவும் அற்புதமான சிலை. இடையை சிறிதாக்கி பிட்டியை, ஆம், பத்து மாதம் குழந்தையை ஏந்தி வளர்க்கும் (Pelvie gudle) ஐப் பெரிதாக்கி, நிற்கிற நிலையிலே ஓர் ஒய்யாரத்தையும் கொடுத்து உருவாக்கியிருக் கிறான் சிற்பி. இறைவனை விட்டு அகலாத நந்தியும் இருக்கிறது இங்கே.

வலப்பாகம் முழுவதும் ஆண்மையும், இடப்பாகத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் பெண்மையின் மென்மையையும் உணரலாம். ஆணும் பெண்ணும் இணைந்த திரு உரு என்பதை இத்தனை அழகோடு காட்டிய சிற்பி மிகவும் சிறந்த கலைஞனாகத்தான் இருக்க வேண்டும்.

கடல் மல்லையையும், காவிரித்திரு நதியையும் விட்டு கொங்கு நாட்டுக்குள் செல்லலாம். மலை நாட்டின் மலை மேலேயே ஏறலாம். திருச்செங்கோடு மலையைத் தூர இருந்து பார்த்தாலே இரண்டு சிகரங்களும், அவை ஒன்றை ஒன்று நன்கு தழுவி நிற்பதும் தெரியும். மலைமேலேயே மிக்க சிரமத்துடன் தான் ஏற வேண்டும்.

ஆ.பெ.அ.நெ-9