பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130


செங்கோட்டு வெற்பன் முருகனையும் தரிசித்து வணங்கி விட்டு கர்ப்ப கிருஹத்துக்குச் சென்றால் அங்கு ஓர் அதிசயம் காத்து நிற்கும். மூலவர் இருக்கின்ற இடத்திலே லிங்கத்திற்கு உரு இராது. பீடம் இராது ஆவுடையாரும் இராது.

அங்கே கம்பீரமாக, வெள்ளைக்கல் உருவிலே காட்சி கொடுப்பவர் அர்த்தநாரிதான். அந்த மூல மூர்த்தியைப் போலவே உற்சவ மூர்த்தியும், எல்லா இடத்தும் வடிவத்தால் பெண்மை மிகுந்திருந்தாலும், தலைமையாய் ஆண்மை மிகுந்திருப்பதைப் பார்க்கிறோம்.

இடப்பாகத்திலே இருக்கும் மிடுக்குக்கு வலப்பாகத்திலே உள்ள காம்பீரியம் குறைந்ததாக இல்லை. தலையை முடித்திருப்பதே தனி அழகு. எங்கெல்லாமோ தேடி அலைந்தும் காணக் கிடக்காத பிருங்கி இங்கே இருக்கிறார், வலப்பக்கத்திலே இறைவன் காலடியிலேதான். இது முந்திய இரண்டு சிலைகளுக்கும் காலத்தால் பிற்பட்ட தாய்த்தான் இருக்க வேண்டும் மக்கள். இனத்திலே ஆண்மை, பெண்மைக்கு அடங்கிய காலத்திலே உருவாகி யிருக்க வேண்டும். பெண்மை, ஆண்மையை அடக்கிய நிலை என்றுதான் இல்லை என்று கேட்பதுபோல் இந்த சிலை நின்று கொண்டிருக்கிறது அங்கே.

இப்படித்தான் கலையும் சிலையும் சேர்ந்து வளர்ந்திருக்கிறது, தமிழ் நாட்டிலே. அதை நன்றாக உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது நமக்கு இன்று.