பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136 ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். பிள்ளையாரோ தானும் சிரிக்கிறார். மற்றவர்களையும் சிரிக்கவைக்கிறார். ஆனால் பெண்களோ, தாங்கள் சிரிப்பதுடன் மற்றவர்களைச் சிரிக்க வைப்பதுடன் அமையாமல், பிள்ளையாரைப் பார்த்து சிரிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.

இந்தப் பெண்களும் சிரிக்கத் தெரிந்தவர்கள்தான். எவ்வளவு அருமையான தத்துவம். அதை விளக்குவதற்கு எவ்வளவு அருமையான பாட்டு. எல்லாம் தமிழில் தான்.

சிரிக்கத் தெரிவது நல்லது. வாழத்தெரிய வேண்டுமானால் சிரிக்கத் தெரிய வேண்டும். சிரித்துச் சிரித்து அதனால் உடல் பருத்துப் பருத்து வாழ் என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. மனிதனுக்கு இன்பம் வரும் போதெல்லாம் தான் சிரிக்கத் தெரியுமே! விலாவெடிக்கச் சிரித்து விடுவான். ஆனால் துன்பம் என்று ஒன்று வந்து விட்டாலோ. மூலையைத் தேடி உட்கார்ந்து, மூக்கைச் சிந்திச் சிந்திப் போட்டு அழுது தீர்த்து விடுவான். இவன் எப்படி வாழ முடியும்? வாழ்க்கையில் இன்பத்தைவிடத் துன்பம் தானே அதிகம். துன்பம் என்று ஒன்று உண்டோ இல்லையோ? தன் மனதிற்கு ஒவ்வாதவைகளையெல் லாம் துன்பம் துன்பம் என்று தானே எண்ணித் துயரடை கிறான் மனிதன். இப்படித் துயருறும் மனிதன் அல்லவா சிரிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அதைத் தானே நமது திருவள்ளுவர் 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று சொல்லுகிறார்.

ஆனால் இந்த உலகத்தில், அழுது தீர்த்தால்தான் மனவேதனை தீரும் என்று எண்ணுகிறவர்கள் பலர். உண்மை என்னவோ அதற்கு மாறானதுதான். ஒருவன் எவ்வளவுதான் அழுதாலும் அது தீரவே தீராது.