பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

137

துன்பங்களும் துயரங்களும் மனிதன் அழுகையை நிறுத்தி சிரிக்க ஆரம்பித்தால்தான் திரும். துன்பத்தில் உழலும் போது எப்படி ஐயா சிரிக்கவரும்? என்று கேட்கலாம். இந்த உலகம் போகிற போக்கையும் அதில் வாழும் மக்களின் நிலையற்ற வாழ்க்கையும் நினைத்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும்.

நாம் இதைப் பெற வேண்டும், அதை அடைய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோமே அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருக்கிறோமே. அடடா அப்படி நாம் அந்தப் பொருள்களையோ, பதவிகளையோ அடைந்து பெறும் லாபம் தான் என்ன என்று எண்ணினால் சிரிப்பு வரும்.

நாம் இந்த உலகில் சிலரை உற்ற சிநேகிதர்கள் என்றும் சிலரை ஜன்ம விரோதிகள் என்றும் எண்ணி சிலரோடு அளவளாவியும், இன்னும் சிலரை அண்டவிடாமலும் வாழ்கிறோமே. இந்த நண்பர்களும் சத்துருக்களும் எத்தனை நாளைக்கு நிலைப்பார்கள் என்று நினைத்துப் பார்த்தால் தானாகவே சிரிப்பு வரும்.

மேலும் சிரிப்பதற்குக் காரணங்களா இல்லை. நாம் உலகத்தை நன்றாய் அறியாமல் போனோமே என்று நம்மை நினைத்தே சிரிக்கலாம். உலகத்துக்கு நம்மைத் தெரிந்துகொள்ளும் சக்தி இல்லையே என்று அந்த உலகத்தையே எண்ணிச் சிரிக்கலாம். வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுதல்கள் திருத்த முடியாதபடி எவ்வளவோ சிக்கலாகி இருக்கின்றனவே என்று எண்ணும்போது தானாகவே சிரிப்பு வரும்.

நம்முடைய ஆசைகள் பூர்த்தியாகமல் போனதற்குக் காரணம் நாம் முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை தானே? நிறைவேறவில்லை என்றெல்லாம் எண்ணி