பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

143

என்னாலோ இதைத் தாங்க முடியவில்லை. என்ன ஸ்வாமி! நீர் கோயிலை அறிவிர், ஆனால் கும்பிட அறியீரோ! என்றேன். ஆம் ஸ்வாமி! எனக்கு கும்பிடத் தெரியவில்லையே என்றார். என்ன திமிர் இவருக்கு என்று நினைத்து ஆமா நீர் என்ன பெரிய மேதாவி என்ற எண்ணமா? கோயிலுக்கு வந்தால் ஏதாவது ஆராதனைப் பொருள் கொண்டு வரவேண்டும் என்று கூடவா தெரியாது? என்று கேட்டேன் நான் ஆத்திரம் தீர. தெரியும் ஸ்வாமி! தெரியும், ஆராதனைக்குக் கொண்டு வந்திருக் கிறேன் ஸ்வாமி ஒரு பொருள், ஆம் கொண்டு வந்திருக் கிறேன் என்று சொல்லி கொண்டே பாட ஆரம்பித்து விட்டார்.

நாராயணாய
நம என்னும் நன்னெஞ்சர்
பாராளும் பாதம்
பணிந் தேத்து மாறு அறியேன்
காராளும் மேனிக்
கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என்
அறியாமை ஒன்றுமே

என்று பாடிக் கொண்டே நின்றார். என்ன அற்புதமான காணிக்கை! தன்னுடைய அறியாமையையே ஆராதனைப் பொருளாக அர்ப்பணிப்பது சிறந்ததுதான்?

இப்படித்தான் அறியாமையை அறிவிக்கிறாரே, இவர் தானே அறிவுடையார். நாமெல்லாம் நமது அறியாமையை உணர்கின்றோமில்லையே. எல்லாம் தெரிந்தவர்களாக அல்லவா நினைக்கிறோம், நடிக்கிறோம். இருவருக் கும் எவ்வளவு தூரம் என்று எண்ணிக் கொண்டே திரும்பினேன் அன்று வீட்டிற்கு.