பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

- என்று தனக்குத் தானே ஒரு கேள்வியும் கேட்டு, "இப்படித்தான் இருக்க வேண்டும்"- என்று ஒரு ஊகத்தையும் விடையாகக் கூறுகிறான். எல்லாம் தனக்குக் தானே தான் -

சேராதன உளவோ
திருச் சேர்ந் தார்க்கு
வேதம் செப்பும்
பேர் ஆயிரம், பொன்
பெய் துளைத்
தார் ஆயிரம், நம்
திருக் குருகூர்
சடகோபன் சொன்ன
ஆரா அமுதக்
கவி ஆகிரம்
அவ்வரியினுக்கே?

என்பதுதான் கவிஞனது கேள்வியும், பதிலுமாக அமைகின்றன.

இப்படி இரண்டு கவிஞர்கள் அரங்கத்து அரவணை யானைக் கண்ட தங்கள் அனுபவத்தைச் சொல்கிறார்கள். அமுதனைக் கண்ட கண்கள் வேறு வேறாக இருந்தாலும் கூட, கவிஞர் இருவரும் அடைந்த அனுபவம் ஒன்றாக அல்லவா இருந்திருக்கிறது! இருவருக்குமே மற்ற விஷயங்களில் சந்தேகம் இருந்தாலும், அழகிய மணவாளன் தோள்கள் பூரித்துப் பெருகுவதற்கும், அவன் யோகக் காரனாக வாழ்வதற்கும் காரணம் அவன் நம்மாழ்வார் என்னும் சடகோபன் பாடல்களைப் பெற்றது தான் என்பதில் துளியும் சந்தேகம் இருப்பதாகத் தெரிய வில்லையே! அவர்களுக்கே இல்லை என்றால் நமக்கு மட்டும் என்ன சந்தேகம் இருக்கப் போகிறது.