பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிழை எலாம் தவிரப் பணிப்பான்


பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போக மும் திருவும் புணர்ப்பானை
பின்னை என் பிழையைப் பொறுப்பானை
பிழை எலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறியொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத் தனி
ஆரூரானை மறக்கலும் ஆமே!

என்பது சுந்தரர் தேவாரம். சேரநாடு சென்று நண்பர் சேரமான் பெருமாள் நாயனாருடன் சில காலம் தங்கியிருந்து விட்டு, திருவாரூரை நோக்கிப் புறப்படுமுன் ஆரூர் தியாகரை மறக்க இயலாமையை உணர்ந்து பாடிய பாடல் இது. இந்தப் பாடல் என் நித்யப் பாராயணப் பாடல்களில் ஒன்று. சாதாரணமாகத் தேவாரப் பாடல்கள் எல்லாம் ஏதோ கோயில்களில் ஒதுவார்கள். பாடுதற்கு மட்டும் உரியது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம் நாம். அவை நம் வாழ்வோடு பிணைந்து நம் வாழ்க்கை யைச் செம்மை செய்யவும் உதவும் என்ற உணர்வு இந்தப் பாடலைப் பாடும் போதெல்லாம் எனக்கு நேர்வதுண்டு. அதைப் பற்றிய ஒரு சிறு சந்தர்ப்பத்தைக் கூறி விளக்கவே இக் கட்டுரை.