பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



156

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

அன்று பகல் ஒரு மணிக்கு நான் சார்ஜ் கொடுக்க வேண்டும். காலை 10 மணி அளவில் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கோர்ட்டில் ஆஜராகும்படி கூப்பிட்டேன். அதிசயம் என்ன வென்றால், நான் யார் யாருக்கு 'கடுங்காவல் தண்டனை' - என்று தீர்ப்பு எழுதியிருக்கிறேனோ அவர்களில் பலர் கோர்ட்டிற்கு வரவில்லை. மற்றவர்கள் எல்லாம் வந்து நின்றார்கள்.

'வராதவர்கள் ஏன் வரவில்லை' - என்று காரணம் வினவினால் இரவு பெய்த மழையின் காரணமாக இடையிலே உள்ள காட்டாற்றில் வெள்ளம். அதைக் கடந்து வரமுடியவில்லை. அவர்கள் எல்லாம் மேற்கே பத்து மைல் போய் ரயில் ஏறி பகல் பன்னிரெண்டு மணிக்குள் வந்து விடுவார்கள் என்றனர். 'சரி பகல் ஒரு மணிக்குத் தீர்ப்புக் கூறுகிறேன்' - என்று எல்லோரையும் அனுப்பி விட்டு மற்ற வேலைகளைக் கவனித்தேன்.

ஒருவேளை அவர்கள் பன்னிரெண்டு மணிக்கு வராவிட்டால் என்ன செய்வது? எழுதிய தீர்ப்புகளைக் கிழித்துத் தீக்கிரையாக்கி விட்டுக் கிளம்பி விடுவதா என்று எண்ணினேன். எதிரிகள் ஆஜர் இல்லாமல் எந்த எந்தத் தீர்ப்பை எப்போது சொல்லலாம் என்று கிரிமினல் புரொளஜேர் கோடு என்ற சட்டப்புத்தகம் ஏதாவது சொல்கிறதா என்று பார்க்க அந்தச் சட்டப் புத்தகத்தின் ஏடுகளைப் புரட்டினேன்.

அதில் சொல்லியிருந்தது, 'சாதாரணமாக அபராதம் மட்டும் போடுவதானால், எதிரிகள் முன்னால் இல்லாத போதும் தீர்ப்புச் சொல்லலாம். சிறை தண்டனை என்று இருந்தால் எதிரிகளை முன்னால் வைத்துக் கொண்டுதான் தீர்ப்புச் சொல்ல வேண்டும்' - என்று.