பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அப்பருடன் ஒரு நாள்

ன்றொரு நாள் மாலையிலே ஆற்றங்கரையிலே நடந்த ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன் நான். பிரபல பேச்சாளர் பேச்சு ஒன்று நடந்தது அங்கு பேச்சாளர் அடுக்கு மொழிகளை அள்ளி வீசினார்; இளைஞர் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பினார். பேச்சுக்கு இடை யிடையே கேள்விகள் வேறு போட்டார்.

ஆலயங்கள் ஏனையா?
அபிஷேகங்கள் ஏனையா?
கோலங் கொடிகள் ஏலையா?
கொட்டு முழக்கம் எனையா?
பாலும் பழமும் வைத்து நிதம்
பணிந்து நிற்பது ஏனையா?
சீலம் பேணும் உள்ளத்தைத்
தெய்வம் தேடி வாராதோ?

என்று கேட்டபோது நீண்ட காலமாகவே, கோயில், குளம், சமயம், சாஸ்திரம் என்று பழகியவர்களும் நிலை குலைந்தனர். மேலும் மேலும் கேள்விகள் பிறந்தன.

தண்ணார் மதியும் புரிசடையும்
தாங்கும் தையல் பாகன் என
எண்ணாது ஒருவன் சொன்னது கேட்டு
எவனோ சொன்னான் அவனைக் கேட்டு
அண்ணா சொன்னான் அது போலின்று
அடுத்த தம்பி சொல்கின்றான்
கண்ணால் ஈசன் திருமேனி
கண்டார் எவரும் உண்டோ சொல்!