பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

அங்கு ஒரு குறட்டில் ஒன்பது சிலா உருவங்கள் இருந்தன. அவற்றிற்கு மேலே, 'நவதாண்டவம்' என்றும் குறித்திருந்தார்கள் வர்ண மையினாலே,

எல்லாம் தாண்டவ உருவங்கள் அல்ல தான் என்றாலும் அவை சிவபிரானுடைய் ஒன்பது மூர்த்தங்கள் என்று தெரிந்து கொண்டேன். அங்கே ஆனந்தத் தாண்டவர் இருந்தார்; ஊர்த்துவ நடனர் இருந்தார்; பிக்ஷாடனர். இருந்தார்; கங்காளர் இருந்தார்; நீலகண்டர் இருந்தார்; கங்காதரர் இருந்தார்; கஜ சம்ஹார மூர்த்தி இருந்தார்; திரிபுர தகனர் இருந்தார்; சந்திர சேகரர் இருந்தார்; இவையெல்லாவற்றையும் காட்டி, “என்ன ஸ்வாமீ! ஒரு ஆளே இப்படி ஒன்பது வேஷம் போடுறாரே, யாரை ஏமாற்ற இப்படிப் பகல்வேஷம் போடுகிறார். இவர்?" என்று கொஞ்சம் நையாண்டித்தனமாகவே கேட்டேன் பெரியவரை. அவருக்குத்தான் பேச்செல்லாம் பாட்டா யிற்றே. உடனே பாட ஆரம்பித்து விட்டார்.

மயலாரும் தன்னடியார்க்கு அருளும் தோன்றும்
மாசில் புன் சடை மேல் மதியம் தோன்றும்.
இயல்பாக இரு பிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல் நஞ்சுண்டு இருண்ட கண்டம் தோன்றும்
கயல்பாய கருங்கல் உழி கங்கை நங்கை
ஆயிரமாம் முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாய சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே!

என்று அவர் பாடப்பாட, ஒருவரே இப்படிப் பல பல மூர்த்தங்களாக, நோக்குவார் நோக்குகின்ற படியெல்லாம் தோன்றுவார் என்று தோன்றிற்று எனக்கு. எல்லாம் காண்பவர், நோக்குபவர், அறிபவர், அறிவாற்றலுக்கு, அருள் நிலைக்குத் தக்கவாறு தான் தோன்றும் என்றும் உணர்ந்து கொண்டேன்.