பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

167

பெருங்கடல் நீந்தும் மார்க்கத்தைத்தானே தேடி அலைகிறார்கள். தாய் கருவில் வாழ் குழவி தாமெல்லாம் வேண்டுவது தூய பிறவாமையே என்றிருக்கும்போது இவர்மட்டும் 'மனித்தப் பிறவி வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று பெரும்போடு போடுகிறாரே என்று எண்ணினேன்.

ஆம். அந்த மனித்தப் பிறவிக்கும்தான் ஒரு நிபந்தனை போட்டு விடுகிறாரே. நடனராஜனைக் காணும் பேறு பெறுவோம் என்ற உறுதிமட்டும் இருந்தால், எத்தனை தரம் வேண்டுமானாலும் இந்த மனிதப் பிறவி எடுக்கலாம்தானே! மனிதப் பிறவியிலும் அது தமிழ் மனிதப் பிறவியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நடராஜனைக் காண்பதேது. அவன் அருளே கண்ணாகக் காணப் பெறுவதேது?

இப்படியெல்லாம் பெரியவருடன் கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்துவிட்டு இறைவனையும் கண்டு தரிசித்து வணங்கிவிட்டு வெளியில் வந்தபோது உள்ளத்திலே ஒரு உறுதி, உடலிலே ஒரு தெம்பு கண்டது. கோயில் வாசலிலேயே அவரை முந்திக்கொண்டு,

நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்
ஏமாப்போம், பிணியறியோம், பணிவோமல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.

என்று நானே பாட ஆரம்பித்துவிட்டேன். இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை என்றே எல்லா இடமும் எதிரொலி செய்ய ஆரம்பித்தன. நான் பாடுவதைக் கேட்ட பெரியவரும், "ஆம் தம்பி! அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை," என்று எனக்கு உற்சாகமூட்டினார், ஒரு தைரியத்தைக் கொடுத்தார். சரி, ஆசாமியை விட்டுவிடக் கூடாது, என்று அவர் காலைப்-