பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

17

காளி அறியாதிருந்த காரணத்தினால் அல்லவா அவள் தோற்று ஒடும்படியாயிற்று என்று எண்ணத் தோன்றும். அப்படி ஆடும் போதே எப்படி ஒரு காலாலேயே கீழே விழுந்த குழையை எடுத்து காதில் அணிந்தானோ அதே போல ஆடும் போதே காலால் நெற்றியில் திலகமுமே இட்டுக் கொண்டிருக்கலாமே. இந்த லதாதிலகம் தான் பரதசாஸ்திரத்தில் உள்ள நூற்றெட்டுக் கரணங்களில் 64 வது கரணம் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள். பின்னால் சிதம்பரம் நடராஜர் கோயில் கீழ்க் கோபுரத்தைக் கட்டிய கோப்பெருஞ் சிங்கனுக்கு இக்கரணங்களை எல்லாம் அங்கு சிற்ப வடிவில் வடித்து வைக்க வேண்டும் என்றும் தோன்றியிருக்கிறது. அதனாலேயே லதாதிலகம் என்று பரத நாட்டிய கரணத்தை அடிப்படையாக வைத்தே ஓங்கி உலகளந்தவனையும், ஆடி அண்டம் அளந்தவனையும் உருவாக்கியிருக்கிறார்கள் சிற்பிகள்.

எனக்கிருக்கிற அதிசயம் எல்லாம் இப்படி இரண்டு பெருமானையும் ஒரே வடிவில் சமைப்பதன் மூலமாக கலை உலகில் ஒர் ஒருமைப்பாட்டை அல்லவா ஆக்க முயன்றிருக்கிறார்கள், அனுபவத்தாலே.

            பொன் திகழும் மேனிப்
                  புரிசடையம் புண்ணியனும்
            நின்றுலகம் தாய
                  நெடு மாலும் - என்றும்
            இருவா திருவர்
                  எனும் ஒருவன்
            ஒருவன்

என்று பொய்கை ஆழ்வார் போன்ற பக்த மணிகளால் பாட முடிந்திருக்கிறது. நாமும் இருவரையும் ஒரே வடிவிலேயே கண்டு மகிழும் பேறு பெறலாம் தானே.


ஆ.பெ.ஆ.நெ-2