பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

27

பிள்ளையார் கிடைத்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படியே கிடைத்தும் இருக்கிறது. இந்தத் தமிழகத்தில் விநாயக வணக்கம் நீண்ட காலமாக, தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்று நாளும் வளர்ந்து வந்திருக்கிறது.

விநாயகர் தமிழ் நாட்டுக் கடவுளா, இல்லை வட நாடு இருந்து தென்னாடு வந்தவர் தானா, என்று ஒரு கேள்வி. பல்லவ மன்னன் நரசிம்மவர்மன், சாளுக்கியரது தலை நகராம் வாதாபி மீது படை கொடு சென்று, அந்நகரைத் தீக்கு இரையாக்கி மீண்ட போது, அந்நகர் கோட்டை வாயிலில் இருந்த விநாயகரைப் பேர்த்து எடுத்து வந்து தன் சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியிலே பிரதிஷ்டை செய்தார் சேனாதிபதி பரஞ்சோதி என்பது கதை.

இந்த வரலாற்றுப்படி கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் அவர் தமிழ் நாட்டிற்கு வந்திருக்க வேணும் என்றாலும், சில ஆராய்ச்சி வல்லுநர்கள், விநாயகர் தமிழர்களின் பழந்தெய்வம் என்பதற்கு எல்லாம் பல சான்றுகள் காட்டுகிறார்கள். இதைப்பற்றி விவாதிக்க விரும்பவில்லை. கலை உலகிலே இந்த விநாயகர் எப்படி உருவானார், அவரைப் பற்றிய வரலாறுகள் என்ன என்று அறியவே இக்கட்டுரை.

விநாயகரது பிறப்பைப் பற்றி எத்தனையோ கதைகள். அவைகளில் சில மிக மிகக் கேவலமான கதைகளும் கூட என்றாலும் இரண்டு கதைகள் பிரசித்தமானவை; நம் கவனத்தைக் கவரக் கூடியவை.

உமையும் சிவனும் ஒரு நாள் உய்யான வனத்திற்குச் செல்கிறார்கள். அங்கே ஒரு பிடியும் களிறும் கலவியில் களிப்பதைக் காணுகிறார்கள், அம்மையும் ஐயனும் பிடி-