பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

தமிழ் நாட்டில் பிள்ளையாரை வணங்கி வீடு பெற்றவர்கள் கதை அனந்தம் என்றாலும், வாழ்வோடு வாழ்வாக பிள்ளையாருடன் ஒட்டிக் கொண்டவள் ஔவைப் பிராட்டி. இளமையிலேயே பிள்ளையார் வணக்கம் அவள் உள்ளத்தில் ஊன்றி விட்டது.

வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுத்து வரும்.

என்று தமிழ் நாட்டுப் பிள்ளைகளுக்கெல்லாம் போதித்தவர் அவர் தான்.

“சீதக் களபச் செந்தா மரைப்பூவும்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடி கொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
"

என்றெல்லாம் பாடி விநாயக வணக்கத்தைத் தமிழர்கள் உள்ளத்தில் எல்லாம் ஊன்றச் செய்தவரும் அவரே தான். அவர் முக்தியடைந்ததும் அந்தப் பிள்ளையார் மூலமே தான். கதை நல்ல அற்புதமான கதை.